மாறி வரும் உணவு பழக்கம்… பாதிக்கப்படும் உணவுக்குழாயை பாதுகாப்பது எப்படி!!!

தஞ்சாவூர்:
மிக வேகமாக காலம் மாறி வருகிறது. அதன் போக்கிலேயே நாமும் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டு வருகிறோம். இதில் உணவு முறையும் மாறி விட்டது. இப்படி மாறிவிட்ட உணவு பழக்கத்தால் நம் உணவுக்குழாய் பாதிக்கப்படுகிறது.

வாயில் உணவை மெல்லும்போதே, 25 சதவிகிதம் செரிமானச் செயல்பாடு நடக்கத் தொடங்கிவிடும். உணவுக்குழாயில் எந்தவித அமிலச் சுரப்பிகளும் கிடையாது. இரைப்பையைத் தவிர, எங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் பட்டாலும், அது உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கும். இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

புகை, மது, சூடாகச் சாப்பிடுதல், சாப்பிடாமலேயே இருத்தல், தண்ணீர் குடிக்காமல் இருத்தல், புளிப்பு, உப்பு, காரம் அதிகமாகச் சாப்பிடுதல், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சூடான காபி, டீ குடித்தல் போன்ற காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கும்.

நெஞ்சு எரிச்சல் பிரச்சனைக்கு, நவீன மருத்துவத்தில் ஜெல் மருந்து, ஆன்ட்டாசிட் போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோம். இந்த மருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். தொடர்ந்து எடுத்துவந்தால், ஒரு கட்டத்தில் அமிலத்தை சுரக்காமலேயே செய்துவிடுவதுதான் இந்த மருந்துகளின் மிகப் பெரிய பக்கவிளைவு.

மேலும், பசியின்மை, மஞ்சள் காமாலை, செரிமானப் பிரச்சனை போன்றவையும் ஏற்படலாம். அதிக மசாலா கலந்த பொருட்களை இப்போது எடுத்துக் கொள்கிறோம். இதுபோன்ற மசாலாக்களில் ரசாயன பொருட்களும் கலக்கப்படுகிறது. இது பாஸ்ட் புட்களில் கலக்கும் போது உணவுக்குழாய் பாதிக்கப்படுகிறது.  இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து எப்படி உணவுக்குழாயை பாதுகாப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

காலை எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஆரோக்கியத்தின் ஆரம்பம். இது, நம் உடலில் வாதம், பித்தம், கபத்தை சமன்படுத்த உதவும். காலை எழுந்தவுடன் திடமான உணவைச் சாப்பிடுவதுகூட உணவுக் குழாயைப் பாதிக்கலாம்.

மணத்தக்காளிக் கீரை, மாதுளை, வாழை,  பால், தண்ணீர்விட்டான் கிழங்கு, பரங்கிக்காய், பூசணி, வெண்பூசணி லேகியம், பிடிகருணை, சீரகத் தண்ணீர், வெந்தயம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து காய்கறிகள், கனிகள், கீரைகள், சுத்தமான தண்ணீர் ஆகியவை உணவுக்குழாய் பிரச்சனையைச் சரிசெய்யும்.

Sharing is caring!