மாற்றம் தரும் சீர்டி சாய்பாபா

என் இறைவனே சாயிபாபா. என் மீது எத்தனை விதமான துன்பங்கள் என்னை சூழ்ந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்து எனக்கு உதவி செய்யுங்கள். என் தன்னம்பிக்கை தடுமாறுகிறது, நான் நிலைகுலைந்து விடுவேன் என மற்றவர்கள் என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள். மனம் நொந்து, மனம் சோர்ந்து போயிருக்கிறேன். என் இறைவனே சாயி பாபா! தங்களுக்கு நன்மை நடப்பதற்காக என்னைத்தேடி வருவோருடன் எனக்காக நீங்கள் இருப்பதையும், எனது விரோதிகள் என்னை நெருங்காமல் இருக்க அவர்கள் மத்தியில் எனது சார்பாக இருப்பதையும் பிறர் உணரும்படி செய்யுங்கள்.

எனது உழைப்பையும் அதன் பலனையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட என்னோடு இருந்து கொண்டே எனக்கு எதிராகச் செயல்படுகிறவர்களிடமிருந்து என்னை நீங்கள் காப்பாற்றுவதை பிறர் உணர்ந்து கொள்ளட்டும்.

என்னுடைய மலை போன்ற பிரச்சினைகளையும் தோள் மீது சுமந்து கொண்டு, வலது கரத்தைப் பிடித்து நீங்கள் என்னை வழிநடத்துவதை மற்றவர்கள் அறிந்து கொள்ளட்டும். துக்கமான நாட்களிலும், சோகமான நேரங்களிலும் நான் உங்கள் நாமத்தையே உதடுகளால் உச்சரித்துக் கொண்டு இருக்கிறேன்.

எமனும் பயப்படுகிற உங்கள் திருப்பெயரின் சக்தி முன்பு எனது கஷ்டங்கள் நிற்காது என்பதை நான் உணர அருள் செய்யுங்கள். எல்லோரும் தங்கள் செல்வங்களால் உங்களுக்கு சேவை செய்து, மகிழ்ச்சியால் துதிக்கிறார்கள், தங்கள் முதற்பலனை காணிக்கையாகத் தருகிறார்கள்.

Sharing is caring!