மிருகசீரிட நட்சத்திரகாரர்கள் செல்ல வேண்டிய தலம் இதுதான்

ஒரு பிரச்னை தீரும் முன்பே அடுத்த பிரச்னை வரிசையில் நிற்கிறதே என்று சலித்துகொள்ளும் மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களின் வேண்டுதலுக்கு செவிசாய்க்க  ஆதிநாராயணபெருமாள் இருக்கிறார். தோஷங்கள் நிவர்த்திக்கும், துன்பங்களிலிருந்து விடுபடவும் அவரவர்கள் பிறந்த நட்சத்திரத்தில் அவர்களுக்குரிய ஸ்தலத்தை வழிபட வேண்டும் என்பதை சமீப நாட்களாக பார்த்து வருகிறோம். அதில் ஒன்றான மிருகசீரிடம் நட்சத்திரத்தை உடையவர்களுக்கான தலம் தஞ்சாவூரிலிருந்து  திருவாரூர் செல்லும்  மாவட்டத்தில் உள்ள எண்கண் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிநாராயண பெருமாள்.  நேரம் கிடைக்கும் போது அல்லது  வருடம் ஒருமுறையாவது அவர்கள் பிறந்த   ஜென்ம நட்சத் திரத்தன்று இத்தல இறைவனை வேண்டினால் பிரச்னைகள் உடனடியாக தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

மூலவர் ஆதிநாராயண பெருமாள், தாயார் ஸ்ரீ தேவி, பூதேவி. பொதுவாக பெருமாள் கோவில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் பக்தர் களுக்கு காட்சி தருவார்.  கருடாழ்வார் அவருக்கு அருகில் அல்லது எதிரில்  இருப்பார். திருவிழாக்காலங்களில் மட்டுமே பெருமாள் கருடன் மீது அமர்ந்து  அருள் புரிவார். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது அமர்ந்து காட்சித்தருகிறார்.   அனுதினமும் நித்ய கருட சேவையை இங்கு  தரிசிக்கலாம் என்பது சிறப்பு. இது போன்ற அமைப்பை  வேறு எந்த பெருமாள் கோயிலிலும் காண்பது அரிது. பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், அனுமன்,  கருடன் சன்னிதி உள்ளது.

புராணக்காலத்தில் இந்த இடம் வன்னிமரக்காடு என்று அழைக்கப்பட்டது. பிருகு முனிவர் மஹாவிஷ்ணுவை நினைத்து தவம் புரிந்து கொண்டிருந்தார். சோழ அரசர் சிங்கத்தை வேட்டையாட பெரும்படை கொண்டு அதிக சத்தத்துடன் வந்தபோது முனிவரின் தவம் கலைந்தது. சினம் கொண்ட முனிவர் சிங்கத்தை வேட்டையாட வந்த நீ சிங்க முகத்துடன் திரிவது என்று சாபமிட்டார்.  சாபம் அடைந்த மன்னன் பிருகு முனிவரிடம் விமோசனம் தரும்படி கேட்க  விருத்த காவிரியில் நீராடி இத்தல பெருமாளை வணங்கினால்  பெருமாளே உனக்கு விமோசனம் அளிப்பார் என்று கூறினார். அதன்படி அரசனும் பெருமாளை உருகி வழிபட  பெருமாள் கருட வாகஙத்தில் அமர்ந்து காட்சி தந்தார். அரசனும் சிங்க முகம் நீங்கி தனது முகத்தைப் பெற்றான்.  அதனாலேயே இத்தலமானது மிருக சீரிட நட்சத்திரத்துக்கு உரியதாயிற்று…

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள்  மனமுருகி ஆதிநாராயணப்பெருமாளை  வேண்டினால் கருடவாகனத்தில் உடனடியாக வந்து உங்களைக் காத்திடுவார். நாக தோஷம், பட்சி தோஷம், திருமணத்தடை, குழந்தைப்பேறு, சருமக் குறை பாடுகள், குழந்தைகளைக் காக்க, குடும்ப ஒற்றுமை அனைத்துக்கும் உடனிருந்து  கோரிக்கையை நிறைவேற்றுகிறார்.  பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்றும், பெளர் ணமி நாட்களிலும் இவரைத் தரிசிக்கலாம். ஆதிநாராயணனுக்குத் திருமஞ்சனம்  செய்து வழிபட்டால்  பிரார்த்தனைகளில் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

Sharing is caring!