முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய கருட புராணம் சொல்லும் உபாயம்!

பித்ருக்களுக்கு செய்யும் உதவிகளில் மிகவும் முக்கியமானது, நிறைய பொருள்களை தானம் செய்வதுதான். ஒருவர் இறக்கும்போது அவருடன் யாரும் கூடச் செல்வதில்லை. ஆனால் இந்த உலகில் இறந்தவரை உத்தேசித்து செய்யப்படும் தானங்களே இறந்தவருக்கு- நண்பனாக – உறுதுணையாக மறு உலகத்திலும் வந்து காப்பாற்றும். ஆகவே பித்ருக்களுக்கு தானமே சிறந்த நண்பன் என்கிறது சாஸ்திரம்.

பித்ருக்கள் மேல் உலகில் படும் கஷ்டங்களிலிருந்து காப்பாற்றவே, பூலோகத்தில் நமஸ்காரம் செய்யும் நபரால், இறப்பவரின் நலனுக்காக என்று கூறி நிறைய தானங்கள் செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு தானங்கள் செய்யாமல் இருந்தால் ,பித்ருக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என கூறுகிறது ஸ்ரீ வேத வ்யாஸ மஹரிஷியால் இயற்றப்பட்ட கருட மகாபுராணம்.

இறக்கும் ஜீவன் மேல் உலகம் செல்லும் வழி முழுவதும், அதிகமான சூட்டினால், கொதிக்கின்ற மணலும், புழுதிகளும், கூறான முட்களும் இருக்கும்.

அதன் மேல்தான் எமதூதர்கள் ஜீவனை நடந்து வரச்செய்து அழைத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் எமதூதர்களுக்கு எந்த ஒரு சிரமும் ஏற்படாது. ஆனால் அந்த ஜீவன், கால் சூட்டினாலும், பசி தாகத்தினாலும் அதிகமான வெப்பத்தாலும், மிகவும் கஷ்டப்படும்.

செல்லும் வழியில் தங்கி இளைப்பாறுவதற்கு மரமோ, மரத்தின் நிழலோ, வீடுகளோ, காடுகளோ, ஆசிரமமோ, தோட்டங்களோ, அல்லது தாகத்தைத் தணிக்க ஓடையோ, கிணறோ எதுவும் கிடையாது. அந்த சமயத்தில் நம்மை இந்த கஷ்டத்திலிருந்து யார் காப்பாற்றுவார்கள்? என்று ஜீவன் ஏங்கித் தவிக்கும்.

Sharing is caring!