மும்மூர்த்திகள் வாழும் அரசமரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்?

தெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகை மரங்களுள் அரசமரம் முதன்மையானது. இம்மரத்தின் இலைகள் தேவர்களுக்கு இருக்கைகளாகவும் வசிப்பிடமாகவும் உள்ளன. நான்கு வேத ரூபமானதும், மும்மூர்த்திகளின் ஓருருவாக விளங்குவதும் அரசமரமே என்று வேதங்கள் போற்றுகின்றன.

இது எங்கும் எந்தச் சூழலிலும் வளரக்கூடிய மரமாகும். அரச மரமானது சமஸ்கிருத மொழியில் அஸ்வத்தம், பிப்பலம், போதிவிருட்சம், சலதளம், குஞ்சராசனம், பூதாவாசம், அக்னிகர்பம்,
விருட்சராஜம், சமீபதி, வனஸ்பதி, வைணவம், யக்ஞாங்கம்,இந்த்ரானுஜம், விருக்ஷேந்திரம், நிம்பபதி, ஹயாம்சஜம் என்னும் பதினாறு பெயர்களால் போற்றப்படுகிறது.

சூரியனின் தேரிலுள்ள ஏழு குதிரைகளின் அம்சமாக அரசமரம் பூமியில் தோன்றியதென்பர். எனவே இம்மரத்தை எப்போதும் ஏழுமுறை வலம்வரவேண்டும். உதயகாலத்தில் பூஜிப்பதும் முக்கியம்.

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மரத்தைக் குறிப்பிட்டிருப்பினும், அனைத்து தெய்வங்களுக்கும் விருப்பமானது அரச மரம் ஒன்றே. இம்மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில்
மகாவிஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் நித்திய வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது.

“மூலதோ பிரம்ஹரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே/
ஆக்ரத: சிவரூபாய
விருக்ஷராஜாய தே நம//’

என்னும் மந்திரம் கூறி அரசமரத்தை வணங்கவேண்டும்.

பாவங்கள், தோஷங்கள், நோய்கள் அகலவும், உடல்நலம் பெறவும், மகப்பேறு அடையவும்
அரசமரத்தை வலம் வருதலும், அரசமரத்தடியில் விநாயகர் அல்லது நாகர் பிரதிஷ்டை செய்து வழிபடுதலும் ஏற்றது.

ஞாயிறு அன்று அரச மரத்தை வலம் வந்து சூரியனைப் பிரார்த்தனை செய்தால் எல்லாவிதமான துன்பங்களும் விலகும்.

Sharing is caring!