முருகனை வழிபட திருமணம் கைகூடும்

முருகனின் அறுபடை வீடுகளுள் ஐந்தாம் வீடாக விளங்குவது திருத்தணி. இக்கோயிலின் சிறப்பம்சம் சரவணபொய்கை ஏரி. முருகன் கார்த்திகேயனாக அவதாரம் எடுத்ததும் இந்த ஏரியில்தான் என்ற வரலாறும் உண்டு.

சரவணப்பொய்கையில் குளித்தால் தீராத நோய்கள் தீரும் என்பது ஒரு ஐதீகம். மேலும் இது புனிதத் தீர்த்தமாகவும் போற்றப்படுகிறது. திருமணமாக பெண்கள் இக்கோயிலுக்கு வந்து பக்தியுடன் விரதமிருந்து முருகனை மனமுருக வழிபட்டால் நிச்சயம் கல்யாணம் கை கூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

சப்த ரிஷிகளும், 7 கன்னியர்களும் வழிபட்ட தலமாகவும் இது விளங்குகிறது. இங்கு நந்தி ஆறு மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆறுமுக சுவாமி, வீ¦ரடீஸ்வரர் கோயில்களும் உள்ளன. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மார்ச் மாதத்தில் 3 நாட்களுக்கு சூரியபூஜை வெகு விமரிசை யாக கொண்டாடப்படுகிறது.நேர்த்திக் கடன்: மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்குதல், சந்தனக்காப்பு செலுத்துதல், பஞ்சாமிர்தம் வழங்குதல், அன்னதானம், பால்குடம் எடுத்தல், காவடி சுமந்து செல்லுதல் உள்ளிட்ட பல நேர்த்தி கடன்களை பக்தர்கள் பின்பற்றுகிறார்கள்.

சூரசம்ஹாரம் இல்லாத முருகன் தலம்: ஆண்டுதோறும் முருகன் தலங்களில் கந்தசஷ்டி தினத்தன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெறும். ஆனால், முருகன் கோபம் தணிந்து காட்சி தரும் தலம் என்பதால் திருத்தணி முருகன் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் செய்யவதில்லை. அன்றைய தினம் முருகனை குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படும். அப்போது 1000 கிலோ எடையுள்ள பூக்கள் பயன்படுத்தப்படும். இக்கோயிலில் சந்தனக்காப்புக்கு சாதாரண சந்தனம் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, இந்திரனே காணிக்கையாக செலுத்தியதாக கருதப்படும் சந்தனக்கல்லில் அரைக்கப்பட்ட சந்தனத்தால்தான் இங்கு சந்தனக்காப்பு செய்யப்படும்.

Sharing is caring!