முருக பக்தரா?…சுவாரஸ்யமான தகவல்கள்

நீங்கள் முருக பக்தரா? ஆம் என்றால், இந்த விசேஷ தகவல்கள் அனைத்தும் உங்களுக்காகத்தான்! கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமல்ல, முருகபக்தர்களுக்கும் மிக உகந்த மாதம். ஏன் தெரியுமா? கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால், கார்த்திகை நட்சத்திரமும் இந்த மாதமும் முருகப்பெருமான் வழிபாட்டுக்கு உகந்தவை எனும் சிறப்பை பெற்றன. ஆகவே, நீங்களும் கார்த்திகை மாதம் முழுக்க விளக்கேற்றி கார்த்திகைக் கடவுளாம் முருகப்பெருமானை வழிபடுவதாலும், அவருடைய திருக்கோயில்களை தேடிச் சென்று தரிசிப்பதாலும் இரட்டிப்பு பலன்கள் உண்டு.
அப்படி தரிசிக்கச் செல்லுமுன், அந்தத் தலங்களுக்கான விசேஷ- சுவாரஸ்ய தகவல்களையும் தெரிந்துகொண்டு சென்றால், இன்னும் விசேஷம்! ஆகவே தெரிந்துகொள்வோம்… கார்த்திகை தெய்வமாம் கந்தன் திருத்தல சுவாரஸ்யங்களை!

அதிசய நாவல் மரம்

சோலைமலை முருகன் கோவிலுக்கு ஸ்தல விருட்சமாக விளங்குவது நாவல் மரம். இந்த அதிசய நாவல் மரம் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்கது. ஔவைக்கு முருகன் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட அதிசய நாவல் மரம் இன்றும் இந்த கோவில் அருகிலேயே உள்ளது. இந்த நாவல் மரம் ஐப்பசி மாதம் பழம் பழுக்கும் தன்மை உள்ளது. மற்ற நாவல் மரங்கள் எல்லாம் ஆடி மாதம் பழுக்கும் தன்மை கொண்டது என்பார்கள்.

உப்பு, புளி, காரம் இல்லாத நைவேத்தியம்!

திருச்செந்தூரில் மூலவர் துறவுக் கோலத்தில் இருப்பதால் அவருக்குப் படைக்கப்படும் உணவில் உப்பு, புளி, காரம் சேர்க்கப்படுவதில்லை. பெரும்பாலும் சர்க்கரைப் பொங்கலே இடம் பெறுகிறது. ஆறுமுகப்பெருமான் இல்லறக் கோலத்தில் இருப்பதால் ஆறுமுக அர்ச்சனை முடிந்தபின் பால்பாயாசம், தேங்காய் சோறு, புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் ஆகிய ஆறுவகை நிவேதம் படைக்கப்படுகிறது.

மூன்று முறை சூரசம்ஹாரம்

முருகப்பெருமான் கோவில் கொண்டு உள்ள எல்லா புண்ணிய தலங்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் திருப்பரங்குன்றத்தில் அருள் ஆட்சி புரியும் சுப்பிரமணிய சுவாமிக்கு மட்டும் ஆண்டுக்கு ‘‘மூன்று’’ முறை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இங்கு ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவின் போதும், தைமாதம் தெப்பத்திருவிழாவின் போதும், பங்குனி மாதம் பெரு விழாவின் போதும் சூரசம்ஹார விழா நடைபெற்று வருகிறது. இந்தத் தலத்தின் மூலவரான முருகன் தேவசேனாபதிக்கு கீழே ஆடு, மயில், யானை, சேவல் ஆகிய 4 வாகனங்கள் இருப்பதைக் காணலாம்.

கிளி வாகனத்தில் முருகப்பெருமான்!

சிதம்பரம், இரத்தினகிரி, வேலூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பிராணமலை, செட்டிகுளம் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களில் யானை வாகனத்தில் முருகன் காட்சி தருகிறார். அதேபோல், திருப்போரூர் கோவிலில் வலம் வரும் போது ஆட்டு வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனத்துடன் கூடிய முருகனை தரிசிக்கலாம்.

முருகன் கோயில் படிக்கட்டுகள்

60 தமிழ் வருடங்களை நினைவு கூறுமுகமாக 60 படிகளை கொண்டது சுவாமி மலை. 365 நாட்களை நினைவு படுத்தும் விதமாக 365 படிகளை கொண்டது திருத்தணி.

படி பாயசம்

தென்காசி அருகே ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படிபாயாசம் நிவேதனம் செய்வார்கள். 1 படி முதல் 12 படி வரையில் அரிசி பாயாசம் செய்து குழந்தைகளுக்கு வழங்குவர்.

சுருட்டு நிவேதனம்

விராலிமலையில் இரவு பூஜையின் போது முருகனுக்கு சுருட்டு நிவேதனம் செய்யப்படுகிறது. இங்கு அருளும் முருகனின் மூன்று முகங்களை நேரடியாகவும், மற்ற மூன்று முகங்களை கண்ணா டியிலும் தரிசிக்காலம்.

சங்கு சக்கரத்துடன் முருகப்பெருமான்

அரிசிக் கரைப்புதூர் முருகன் மகாவிஷ்ணுவைப் போல் சங்குக் கரங்களுடன் காட்சி தருகிறார். அதேபோல், இலஞ்சி திருக்கோயிலின் நுழைவு வாயிலில் பத்து தலைகளுடன் முருகன் அமர்ந்துள்ள திருக்காட்சியைக் காணலாம்.

Sharing is caring!