முளை கட்டிய தானியங்களை வெறுவயிற்றில் சாப்பிடலாமா??

முளைக்கட்டிய தானியங்களில் அதிகப்படியான உயிர்ச்சத்து சி மற்றும் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு சம்மந்தமான கோளாறுகளை சந்திக்க நேரிடும்.

தானியங்களை முளைக்கட்டும் முறை:

சிறு தானியங்களை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும், முளைக்கட்டி சாப்பிடுவதனால் அதிகப்படியான சத்துக்களை பெற முடியும். எவ்வாறு தானியங்களை முளைக்கட்டுதல் முறையில் முளைக்க வைக்கலாம் என பார்க்கலாம்.

தேவையான அளவு தானியங்களை பாத்திரத்தில் போட்டு தானியம் மூழ்கும் அளவிற்கு நல்ல தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர், மெல்லிய துணியில் ஊறிய தனியங்களைப் போட்டு காற்று புகாத வண்ணம் துணியை கட்டி, சூரிய ஒளி படும் இடத்தில் தொங்க விட வேண்டும்.

தானியம் இருக்கும் துணி காய்ந்து போகாத‌ வண்ணம் அவ்வப்பொழுது தண்ணீர் தெளிக்க வேண்டும் இல்லையேல் தானியம் காய்ந்து விடும். சில தானியங்கள் 8 மணி நேரத்தில் முளைத்து விடும், சில தானியங்கள் முளைக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். முளைவிட்ட தானியங்களை நமது விருப்பத்திற்கேற்ப வேகவைத்து, பச்சை சாலட், தோசை, அடை, இனிப்பு பண்டம் என செய்து உட்கொள்ளலாம்.

முளைக்கட்டிய தானியத்தில் இருக்கும் நன்மைகள்:

முளைவிட்ட தானியங்க‌ளில் சாம்பல் சத்து அதிகமாக இருப்பதால், இரத்தம் சம்மந்தமான பிரச்னைகளை சரி செய்கிறது. மேலும் ரத்த சோகை, இதய வால்வுகளில் அடைப்பு போன்ற உபாதைகளும் நம்மை நெருங்காது.

முளைக்கட்டிய தானியங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதுடன், உடல் செயல்பாட்டிற்கு தேவையான எரிசக்தியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.

இதில் உயிர்ச்சத்து ஏ நிறைந்திருப்பதால் கண் சம்மந்தமான எந்த பிரச்னையையும் சரி செய்து விடும். மேலும் சருமத்தை ஆரோக்யமாக வைத்து கொள்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.

முளைக்கட்டிய தானியங்களில் ஒமேகா அமிலம் அதிக அளவில் இருப்பதனால், இது முடி வளர்ச்சியை தூண்டி. நல்ல ஆரோக்யமான
முடியை பெற உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பதால், ஹார்மோன் சுரப்பிகளை தூண்டி, ஹார்மோன் சரியான விகிதத்தில் சுரக்க வழிவகை செய்கிறது.  மேலும் புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது முளைக்கட்டிய தானியம்.

உயிர்ச்சத்து பி அதிக அளவில் இருப்பதால் மென்மையான சருமத்தை பெறுவதுடன், தோல் புற்று நோய் உண்டாவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது. சருமம் புத்துணர்வுடன் செயல்படவும் உதவுகிறது.

இதில் மணற் சத்து அதாவது சிலிக்கா சத்து இருப்பதால், செல்களின் இழப்பை குறைத்து, செல் மறுசீரமைப்பிற்கு வழி செய்கிறது.

முளைக்கட்டிய தானியத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட், டீ.என்.ஏ மாற்றத்தை கட்டுப்படுத்தி. பெண்பிள்ளைகள் சிறிய வயதில் பூப்பெய்துவதை தடுக்கிறது.

பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்து அதிக அளவில் கொண்ட முளைக்கட்டிய தானியங்கள், நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி உடல் நடுக்கத்தை குறைக்கிறது.

முளைக்கட்டிய தானியங்களை எவ்வாறு சாப்பிடலாம்:

முளைக்கட்டிய தானியங்கள் உடலுக்கு அதிக நன்மை பயக்கக் கூடியவைதான் ஆனால்,சரியான முறையில் இதனை சாப்பிடா விட்டால் அதிக உபாதைகளையும் கொடுக்க வல்லது.

உடல் எடை கட்டுப்பாடு என்ற பெயரில் காலையில் வெறும் வயிற்றில் முளைக்கட்டிய தானியங்களை சாப்பிட கூடாது. பொதுவாகவே முளைகட்டப்பட்ட தானியங்களில் அமிலத்தன்மை மற்றும் உயிர்ச்சத்து சி அதிகம் இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அல்சர், அசிடிட்டி போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். வேண்டுமென்றால் வேக வைத்து எடுத்துக்கொள்ளலாம்.

காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடக்கூடாது. இத்தகைய தானியங்களில் புரதம், உயிர்ச்சத்து நிறைந்திருந்தாலும். உடலுக்கு தேவையான கொழுப்பு, எனர்ஜி, கார்போஹைட்ரேட், மினரல்ஸ் போன்ற சமச்சீர் ச‌த்துக்கள் கிடைக்காமல் போய்விடும். எனவே ஒரு நேரம் மட்டுமே முளைக்கட்டிய தானியத்தை மற்ற உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

முளைக்கட்டிய பாசிப்பயிறை தவிர மற்ற முளைக்கட்டிய தானியங்களை 5 முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. செரிமானம் ஆவது கடினம் என்பதால் முதியவர்களும் முளைகட்டிய தானியங்களை பச்சையாக எடுத்துக்கொள்ளாமல் வேகவைத்து சாப்பிடலாம்.

ஒரே வகையான தானியங்களை தொடர்ந்து எடுத்துக்கொள்ளக் கூடாது மாறாக தினம் ஒவ்வொரு வகை தானியத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிடலாம்.

தானியங்களை நல்ல தண்ணீரில் ஊற வைத்து  சாப்பிடுவதால், தண்ணீரால் ஏற்படும் நோய்களிலிருந்து தப்பிக்கலாம். எனவே  முடிந்த‌ வரை வீட்டில் தயாரிக்கப்பட்ட முளைக்கட்டிய தானியங்களை உட்கொள்வது சிறந்தது.

வயிற்று உபாதைகளான அல்சர், அசிடிட்டி, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னை உள்ளோர், கர்ப்பிணிகள் முளைக்கட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்து வேகவைத்து சாப்பிடுவது நல்லது.

Sharing is caring!