மூச்சு முட்டும் மூட்டுவலி…

மூட்டுவலி இவர்களுக்கு மட்டும்தான் என்னும் அபாயக்கட்டத்தை எப்போதோ தாண்டிவிட்டோம். முதுமையின் போது உடல் உறுப்புகளின் இயக்கம் தடை படுவதால் உண்டாகக்கூடிய வலி என்று தான் மூட்டுவலியை சமீப வருடங்களுக்கு முன்பு வரை நினைத்திருந்தோம். ஆனால் இப்போது அப்படி அல்ல வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாடாய் படுத்தி எடுக்கிறது.

மூட்டுவலி என்று இதை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது. அடுத்து ஒரு அடியையும் எடுத்து வைக்க முடியாமல் அவஸ்தைப்படும் போது படிகளில் ஏறி இறங்குவது சாதாரண காரியமல்ல. இளம் வயதிலேயே மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள். அதிகமாக வேலை செய்ததால் வலி வருகிறது போலும் என்று அலட்சியப்படுத்துபவர்களும் இவர்களில் அநேகம் பேர்.

வலி இயல்புக்கு மாறாக அதிகரிக்கும் போதும் அதை பொருட்படுத்தாமல் இருப்பது வலியின் தீவிரத்தை அதிகமாக்கிவிடும். வயது கூட கூட வலியின் தீவிரம் மேலும் அதிகரிக்கும். நமது உடம்புகளில் மூட்டுகள் இணையும் பகுதியே மூட்டுகள் என்று அழைக்கப்படுகிறது. நமது உடலில் முக்கியமாக ஆறு மூட்டுகள் இருக்கின்றது. தோள்பட்டை, கைமூட்டு, கை மணிக்கட்டு, கால்மூட்டு, கால் பாதம், இடுப்பு மூட்டு போன்றவையாகும்.

மூட்டு இணைப்புகளை மூடி பாதுகாக்கும் மென்மையான திசுக்கள் தேய்ந்து எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராயும் போது கடுமையான வலியை உண்டாக்குகிறது. இந்த திசுக்களின் தேய்மானத்துக்கு சரியான காரணம் இதுவென்றி கண்டறியமுடியவில்லை.அதிக உடல் எடை கொண்டிருப்பவர்கள், உடல் உழைப்பு குறைவானவர்கள்,உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பெண்களாக இருந்தால் மெனோபாஸ் காலங்களுக்கு பிந்தைய உடலின் ஹார்மோன் மாற்றங்கள்  போன்ற பாதிப்புகளைக் கொண்டிருப்பவர்களுக்கு  மூட்டுவலி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

வலியானது தற்காலிகமானதாக இருந்தால் இரண்டு நாட்களில் வலி சரியாகிவிடும். ஆனால் அது மூட்டுவலிக்கான காரணமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. காலையில் எழும்போதே கால்களை சட்டென்று அசைக்க முடியாது. முழங்கால்கள் விரைப்பாக இருக்கும். கால்களை நீட்டவோ மடக்கவோ முடியாது. காலை தூக்கி வைக்க முடியாது. சிறிது தூரம் நடக்கும் போதே கால்கள் ஓய்வு கேட்கும். சிலருக்கு மூட்டு இணைப்புகளை அசைக்க முடியாமை மற்றும் மூட்டு இணைப்புகளில் வீக்கம் ஆகியவை உண்டாகும்.

மூட்டுவலியை அலட்சியப்படுத்தினால் ஆர்த்ரைடீஸ் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ்,ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் போன்ற பாதிப்புகளை கொண்டு வந்துவிட்டுவிடும். மேலும் மூட்டுவலி இருப்பவர்கள் நடக்க கூடாது என்று நினைப்பது தவறானது. வலி இருப்பவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மூட்டில் இருக்கும் தசைகள் நெகிழ்ந்து மூட்டுகள் விறைப்படைந்து வலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

Sharing is caring!