மூதேவியை வழிபட நன்மைகள்…?

பல்லவர் மற்றும் சோழர் காலங்களில்  மூதேவி என்பவளை வழிபட்டு வந்திருக்கிறார்கள். இம்மன்னர்கள் கட்டிய சன்னிதிகளில் மூதேவிக்கு தனி சன்னிதிகள் அமைத்திருக்கிறார்கள். பெரும்பான்மை மக்களின் குலதெய்வமே மூதேவியாகத்தான் இருந்திருக்கிறது. இவளே வட இந்தியாவில் ஜேஷ்ட தேவியாக அழைக்கப்படுகிறாள். ஆக மூதேவி என்பவள் வழிபாட்டுக்குரியவளே என்பதை இதிலிருந்து உணரலாம்.

பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷத்திலிருந்து  முதலில் வெளிப் பட்டவள் மூதேவி என்றும், அமிர்தத்திலிருந்து வெளிப்பட்டவள் மஹாலஷ்மி என்றும் சிலர் கூறுகிறார்கள்.  லஷ்மிக்கு முன்பு வெளிப்பட்டதால் மூத்தாள், மூத்த தேவி, முதலில் வந்த தேவி என்று அழைக்கப்பட்டவள் நாளடைவில் மூதேவியாக மாறினாள்.  பெண் தெய்வங்களில் முதன்மையானவள் பார்வதி. அது போல்  முதலில் வந்த தேவி அனைத்து பெண் தெய்வங்களுக்கும் மூத்த தேவி என்று கூறிய விஷ்ணு பகவான் அவளை படைத்ததற்கான காரணங் களையும் கூறினார்.

பிரம்மாவினால்  முதலில் நான்கு உயிரினங்கள் படைக்கப்பட்டன    . ஒவ்வொரு யுகத்திலும் குறிப்பிட்ட விகிதாச்சார அளவில் ஜீவராசிகள் வாழவேண்டும் என்பதே நியதி.  படைக்கப்பட்ட உயிரினங்கள் அவர்களது பாவ புண்ணியங்க ளுக்கு ஏற்ப அந்த யுகங்கள் முடிந்து அடுத்த யுகங்களில்  அதே உயிரினமாகவோ வேறு உயிரினமாகவோ கூட பிறவி எடுக்க வாய்ப்புண்டு. இரண்டு, மூன்று  யுகங்கள் காத்திருந்து நான்காவது யுகத்தில் கூட பிறவி எடுக்கலாம். சில உயிரினங்களுக்கு பிறவாமை நிலை கூட ஏற்படலாம். அத்தகைய பிறவா நிலையை அடைய நல்ல செயல்களை  செய்ய வேண்டும். உலகில் நன்மையும், தீமையும்  எது என்பதை புரிந்து மக்கள்  வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இரண்டு  விதமான  தேவிகளை படைத்தேன்.

மேலும் லஷ்மியை இரு உருவமாக்கி தீமைகளை எடுத்துசொல்லும் அவதாரமாக மூத்த தேவி என்னும் ஜேஷ்டதேவியை முதலில் வெளிப்படுத்தினேன். இவள் தீமைகளும் தரித்திரங்களும் அழுக்குகளும், குப்பைகளிலும் வசிக்கும் வகையில் பெருத்த உருவில்  படைத்தேன். தீமைகளைத் தொடர்ந்து செய்து கொண்டி ருப்பவர்களின் மனதிலும் வீட்டிலும் மூதேவி வசிப்பாள். அவள் இருக்கும் இடத்தில் லஷ்மி வாசம் செய்ய மாட்டாள் என்பதால் வீட்டில் தரித்திர நிலையை உண்டாக்கி அவர்களுக்கு தொல்லையையும் கஷ்டங்களையும் கொடுத்துக் கொண்டே அவர்களை நல்வழிக்கு மாற்றும்வரை அங்கு தங்கியிருப்பாள். தீமைகளை விலக்கி நல்வழியில் அவர்களை வரவழைப்பதே அவளுக்கு சந்தோஷமிக்க தருணம் அப்படியே  அவர்களை நல்வழிப்படுத்தி லஷ்மியை வீட்டுக்குள் வரவழைத்து இவள் வெளியேறுவாள் என்று மூத்த தேவியை படைத்த காரணத்தை விஷ்ணு பகவான் விளக்கினார்.

மூதேவி என்னும் தேவி அறுபத்து நான்கு தரித்திரங்கள் உள்ள இடத்தில் வசித்து அந்த இடத்தை தூய்மைப்படுத்தி, தரித்திரத்தையும் அறியாமையையும்  நீக்கு பவள். மனதில் தீமையான எண்ணங்கள் அண்டாமல் இருக்க நம் முன்னோர்கள்  ஜேஷ்ட தேவியை வணங்கினார்கள். தீமைகளையும் தரித்திரங்களையும் போக்கி வளமான வாழ்வு அளிப்பதால் ஜேஷ்ட தேவி இஷ்ட தெய்வமானாள். இவள் தவ்வை என்றும் அழைக்கப்படுகிறாள். மூதேவி என்பவள்  அமங்கலமானவள் அல்ல…

தரித்திரத்தை போக்கி வளமையை தரும் மங்கலமிக்கவள். நம் மனதில் தீய எண்ணங்கள் குடிகொண்டிருக்கும் வரை மூதேவி  நமது அறியாமையை போக்க தரித்திரத்தை அதிகரிக்கத்தான் செய்வாள். அவை வெளியேறும் போது  வாழ்வில் வளத்தை மட்டுமே தருவாள்.  சனி பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள் சனியின் மனைவியான இந்த மூதேவியை வணங்கினால் நன்மை நாடி வரும்.

Sharing is caring!