ராகு காலத்தில் நல்ல விடயங்களை செய்யலாமா?

நல்ல காரியத்துக்கு வெளியே போகும் போது நாள் நட்சத்திரம் பார்க்கிறது முக்கியம் தானே என்ற சம்பிரதாயம் மட்டும் பழமை மாறாமல்  எல்லோராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அஷ்டமி, நவமி, பிரதமை திதிகளிலும் புதிய காரியங்களைத் தொடங்க கூடாது என்று சொல்பவர்கள் அனுதினமும் வரும்  ராகு காலத்திலும்,  எமகண்டம் என்று அழைக்கப்படும் கேது காலத்திலும்  சுப நிகழ்ச்சிகளையும், புதிய முயற்சிகளையும் நிச்சயம் செய்யமாட்டார்கள்.

வாரத்துக்குரிய ஏழு நாட்களையும் ஒவ்வொரு கிரகங்களுக்கு ஒருநாள் என்று பகிர்ந்துகொடுத்த ரிஷிகள்  சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகுவுக்கும், கேதுவுக்கும் தினம்  ஒன்றரை மணி நேரம் என்று பகிர்ந்தளித்தார்கள். ஜாதகத்தில் ராகுவும், கேதுவும் சர்ப்பங்களாக  இருப்பதால் இவை இருக்கும் காலங்கள் அசுப காலங்களாக கருதப்படுகிறது. அதனாலேயே ராகுவும், கேதுவும்(எமகண்டமும்) ஒதுக்கி வைக்கப்பட்டன.

ராகுவும், கேதுவும் தலையும், உடலும் மாறி நிற்கும் அரூப கிரகம் ஆகும்.  சூரிய சந்திர கிராணங்களின் போது ராகு, கேதுவால் நமக்கு மந்தமான மனநிலையும், ஒளியும்  தடை படுகிறது என்னும் போது நாளொன்றுக்கு இவர்களுக்குரிய நேரத்தில் நல்ல காரியங்கள் செய்தாலும் நமது மதியை மயங்க வைத்து செயல்படவிடாமல் தடுக்கும். ராகு வழிபாடு செய்யும் ராகு காலத்திலும், கேது வழிபடும் கேது காலத்திலும் மற்ற கிரகங்களின் சக்தி குறைவாக இருப்பதால் சுப காரியங்களை தவிர்க்க   வேண்டும் என்று சொல்வதும் உண்டு.

இப்படித்தான் எமகண்டத்திலும் எந்த ஒரு செயலை செய்தாலும் மரணத்துக்கு சமமான விளைவை ஏற்படுத்தும். ஆபத்து, விபத்து, பிரச்னைகள் போன்றவற்றை  உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதே நேரம் ராகு காலத்தில் விசேஷ பூஜைகள்  செய்வதற்கும்,  வேண்டிய வரத்தைப் பெறுவதற்கும் உகந்த நேரமாக கருதப்படுகிறது.  செவ்வாய், ராகு கிரகங்களால் தோஷம் இருப்பவர்களும் செய்யும் காரியங்களில் தடை, தொடர் தோல்வி, வாழ்வில் நிம்மதியின்மை போன்ற பிரச்னைகள் தீரவும் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.

துர்க்கை அம்மனுக்கு வீட்டில் விளக்கேற்றாமல்  கோயிலில் ஏற்றுவதே நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை,  பொன் பொருள் சேர்க்கை, திருமணத்தடை, மாங்கல்ய பாக்கியம்,  வீடு மனை தொடர்பான பிரச்னைகளுக்கு வெள்ளிக்கிழமை  மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாடு நிச்சயம் பலன் தரும். ராகு காலத்தில் புதிய முயற்சிகளை விடுத்து புதிய முயற்சிகள் கை கூட வேண்டும் என்று துர்க்கை அம்மனை வழிபடுங்கள்.

Sharing is caring!