வரலஷ்மி நோன்பை எல்லோரும் கடைப்பிடிக்கலாம்…

நாளை வரலஷ்மி நோன்பு. புதிதாக திருமணமான பெண்கள், இந்த வருடம் முதல் நோன்பை எடுக்க விரும்பும் பெண்கள் என்ன செய்யலாம் என்று பார்க்கலாமா?

பூஜைக்கு முன் தினம், அதாவது இன்று வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையையும் சுத்தம் செய்யவும். வரலஷ்மி நோன்பு என்றாலே அனைவரும் அம்மனை கலசத்தில் வைத்து வழிபடுவது பொதுவானது. அதனால் கலசம் வைக்கும் இடங்களைச் சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு, அகல் விளக்கை ஏற்றி, அம்மனை அழைக்க வேண்டும்.

ஒரு சிறிய மண்டபம் அமைத்து, அலங்கரித்து மண்டபத்தின் இரு பக்கங்களிலும் வாழை மரக்கன்று கட்டி, பூக்களால் தோரணம் கட்டி, அதில் மஹாலஷ்மியின் முகத்தை வைக்க வேண்டும். வெள்ளியால் உருவாக்கப்பட்ட மஹால்ஷ்மியின் சிறு உருவ சிலையையும் வைக்கலாம். இயலாதவர்கள் மஹாலஷ்மியின் படத்தை வைக்க வேண்டும்.

முன்பெல்லாம் வெள்ளி, பித்தளை, செம்பு அல்லது சிறிய குடங்களில் கலசம் வைத்து, கலசத்தின் வெளிப்புறத்தில்  மஞ்சள் அல்லது சந்தனம் பூசி  வெள்ளியில் கண் மலர்கள், மூக்கு, வாய் என்று தனித்தனியாக கிடைக்கும் அவயங்களை சந்தனத்தில் பொருத்துவார்கள். இப்போது அப்படியெல்லாம் கிடையாது. வெள்ளியில் அம்மன் முகம் அப்படியே கிடைத்து விடுகிறது.

வழிபாட்டின் சிறிய மனைப்பலகையின் மீது கோலமிட்டு, அதன் மீது தலைவாழை இலையை போடவும். வாழையிலையின் மையத்தில் நெல் அல்லது பச்சரியைப் பரப்பி வைக்கவும். வாழையிலையின் ஓரத்தில் மஞ்சள் பிள்ளையாரை அவருக்கே உரிய அருகம்புல்லில் வைத்து, அதன் பிறகு குலதெய்வத்தை மனதில் நினைத்து வழிபட்டு வெள்ளி, பித்தளை அல்லது செம்பு கலசத்தை அலங்கரிக்க வேண்டும்.

வெள்ளி, அம்பிகைக்கு பிடித்த உலோகம் என்றாலும், ஆகம விதிப்படி வீட்டில் நல்ல ஆற்றலை அதிகரிக்க கூடிய சக்தி செம்புக்கு உண்டு என்பதால் செம்பு கலசம் மிகவும் நல்லது.

Sharing is caring!