வாயு பிரிவதால் இத்தனை சிக்கல்களா?

பொதுவாக, வாயு பிரிதல், அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வயிற்றில் சத்தம் ஏற்படுதல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உடல் உபாதையே ‘வாயுத் தொல்லை’ஆகும்.

உணவை அவசரமாகச் சாப்பிடும்போது, காபி, டீ, சோடா பானங்களை உறிஞ்சி குடிக்கும்போது, சூவிங்கம் போன்றவற்றை தொடர்ந்து மென்றுகொண்டிருக்கும்போது, சரியாக உணவை மென்று உட்கொள்ளாதபோது, பேசிக்கொண்டே சாப்பிடும்போதும் உணவுடன் காற்றும் சேர்ந்து குடலுக்குள் சென்றுவிடும். அவ்வாறு செல்லும் காற்றில்  80 சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது.

மீதி 20 சதவீத வாயு, குடலில் உணவு செரிக்கும்போது உருவாகும் ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்களுடன் சேர்ந்து ஆசன வாய் வழியாக வெளியேறும். இதுபோன்று குடலில் உற்பத்தியாகும்  200 மி.லி. வாயு  வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும்.  ஆனால், உணவு சரியாகச் செரிக்காமல், அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்காப்டான் போன்ற வாயுக்களுடன் வெளியேறும் துர்நாற்றத்துடன்கூடிய   வாயு உடலுக்குள் கோளாறு இருப்பதை உணர்த்துகிறது எனலாம்.

ஒரு நாளில் 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. ஆனால் புளித்த ஏப்பம், வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் போன்ற அறிகுறிகளுடன் வெளியேறும் வாயு மலச்சிக்கல், பித்தப்பைக் கற்கள்,  குடல் எரிச்சல் நோய்,  கணைய நோய், குடல் காசநோய் போன்றவற்றுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

வாயுவை கட்டுப்படுத்த வேண்டுமானால் வேகமாக சாப்பிடக் கூடாது, பேசிக்கொண்டே உணவை விழுங்கக் கூடாது.

வாயு தொல்லை உள்ளவர்கள் சோயாபீன்ஸ்,மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், வாழைக்காய், முந்திரி போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டாம்.

கிழங்கு வகைகளான  உருளைக் கிழங்கு,மரவள்ளிக் கிழங்கு, சேனைக் கிழங்கு,  சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றையும் அளவாக சாப்பிடுவது நல்லது.

ஜங் புட், ஃபாஸ்ட் புட் என சொல்லக்கூடிய சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கை பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள் ஆகிய‌வற்றை தவிர்க்க வேண்டும்.

முட்டை, இறைச்சி, பால்சார்ந்த பொருட்கள், அப்பளம், வினிகர், பீர் ஆகியவற்றையும் கவனமாக சாப்பிடுவது நலம்.

அதிகப்படியான வாயு பிரச்னையை சந்திக்கும் நபர்கள் மருத்துவரை அணுகி வாயு ஏற்படுவதற்கான காரணத்தையும், தடுக்கும் சிகிச்சையையும் எடுத்து கொள்ள வேண்டும்.

Sharing is caring!