வாழை இலையில் சாப்பிட்டால்…

ஆரோக்யமான உணவை ஆரோக்யம் தரும் பாத்திரத்தில் சமைத்து ஆரோக்யம் கூட்டும் தட்டில் சாப்பிடுகிறோமோ? இங்கு ஆரோக்யம் தரும் தட்டு என்பதை முழுமையாக பூர்த்தி செய்வது வாழை இலை மட்டுமே என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

வாழை அடிமுதல் நுனி வரை அனைத்துமே மருத்துவக்குணங்களைக் கொண்டது. வாழையிலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைப்பழம், வாழைக்காய் எல்லாவற்றின் பின்னாலும் சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

முன்னோர்கள் விருந்துகளிலும் விசேஷ நாட்களிலும் அன்னத்தை தலை வாழையிலையில் தான் பரிமாறினார்கள். அசைவ உணவாக இருந்தாலும் சைவ உணவாக இருந்தாலும் வாழையிலையில் சாப்பிட்டால் செரிமானம் எளிதாகும் என்றார்கள். இவை இல்லாமல் உணவின் ருசியும் சுவையும் மணப்பதில்லை என்பதோடு இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் அளப்பரியாதது என்பதை கணித்து வைத்திருந்தார்கள். அதே பாரம்பரியத்தை கைவிடாமல் விசேஷக் காலங்களில் வாழை மரத்தை கட்டி மணம் பரப்பினாலும் வாழை இலையில் உணவு உண்பது பெருமளவு குறைந்துவிட்டது.

 பாரம்பரியத்தைக் காப்பாற்ற வாழை இலையில் சாப்பிட வேண்டும் என்று சொல்வதில்லை. ஆரோக்யத்தைக் காக்கவே வாழையிலையில் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள். காரணம் வாழை இலை கிருமிநாசினியாக செயல்படுகிறது. உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து உடலுக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தும் ஆற்றலைக் கொண்டது வாழை இலை.

க்ரீன் டீ இலை போலவே வாழை இலையிலும் இளமையைத் தக்கவைக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. வாழை இலையில் உள்ள ஈ.ஜி.சி.ஜி. என்னும் பாலிஃபினால்கள் செல்களில் உள்ள டி.என்.ஏவை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது. வாழையிலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. சூடான சாதத்தைப் பரிமாறும் போது வாழை இலை சூட்டில் வெந்து இதிலுள்ள பச்சையத்தில் உள்ள பாலிஃபினால்கள் சாப்பாட்டில் கலந்துவிடுகிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ, கால்சியம், கரோட்டின்  போன்ற சத்துக்களும் உணவோடு சேர்ந்து உடலுக்கு கிடைக்கின்றன. செரிமானத்தையும் எளிதாக்குகிறது.

வாழை மரத்தில் இருந்து வெளியாகும் ஆக்ஸிஜன் வாழையிலையை அறுத்து வைக்கும் போதும் கிடைக்கிறது என்பது மற்றொரு சிறப்பு. பயணங்களில் உணவுப்பொருள்களை எடுத்துச்செல்ல வாழை இலைகள் தான் உகந்தது. உணவுப் பொருள்களில் உள்ள சத்துக்கள் குறையாது என்பதோடு நீண்ட நேரம் உணவுப் பொருள்களைக் கெடாமல் வைத்திருக்கும். விசேஷ நாட்களுக்கு மட்டுமல்ல வெறும் நாட்களிலும் வாழையிலையைப் பயன்படுத்துங்கள். பாரம்பரியம் காக்க என்பதை விட ஆரோக்யம் காக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

Sharing is caring!