வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் சோர்ந்து போகாத அனுஷ நட்சத்திரக்காரர்கள்

சனி பகவானின் ஆதிக்கத்தில் இரண்டாவது நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி சனிபகவான். செல்வத்துக்கு உரியவளான ஸ்ரீ மகா லஷ்மி பிறந்த நட்சத்திரம் இது. மூன்று நட்சத்திரங்களின் கூட்டமைப்பை கொண்டிருக்கும் அனுஷ நட்சத்திரம் அனுராதா, மருதுதாரா என்னும் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. அனுஷ நட்சத்திர நாளை வெள்ளை நாள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அனுஷ நட்சத்திரத்தைக் கொண்டிருப்பவர்கள் விருச்சிக ராசியை கொண்டிருப்பார்கள்.

அனுஷ நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டவர்களான  நீங்கள் சூரியனின் ஆதிக்கத்தைப் பெற்றிருப்பீர்கள். நினைவாற்றலையும், புத்திகூர்மையையும் இயல்பாக கொண்டிருப்பீர்கள். எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள். பயணங்களில் ஆர்வம் கொண்டிருப்பவர்களாக இருப்பீர்கள். தர்ம சிந்தனையும், இரக்க சிந்தனையும் மேலோங்கி இருக்கும். உங்களுக்குள் ஓர் எல்லையை வைத்துக்கொண்டாலும் பெற்றவர்களை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை காப்பீர்கள். சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை கடும் உழைப்பின் மூலமாக அடைந்துவிடுவீர்கள்.

அனுஷம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் புதனின் ஆதிக்கத்தைப் பெற்றிருப்பீர்கள். தோற்றத்தில் கவனம் செலுத்தும் நீங்கள் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வதிலும் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். கடினமான சூழ்நிலைகளையும் உங்கள் சாதுரியமான செயல்களால் இயல்பாக கடந்துவிடும் திறமையைக் கொண்டிருப்பீர்கள். இயற்கையை நேசிக்கும் நீங்கள் கல்வியிலும் சிறந்துவிளங்குவீர்கள். எதிர்பாலின நட்பை எளிதில் பெற்று விடுவீர்கள். எல்லோரிடமும் சுமூகமாக பழகும் குணங்களைக் கொண்டிருப்பீர்கள்.

அனுஷம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் சுக்கிரனை அம்சமாக கொண்டு விளங்குவீர்கள். உழைப்புக்கு அஞ்சாதவர்கள் நீங்கள் அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்வீர்கள். குறிக்கோளை வகுத்து கொண்டு திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிபெறும் வல்லமையைக் கொண்டிருப்பீர்கள். மனதை மறையாது பேசும் நீங்கள் இருக்கும் துறையில் சிறந்து விளங்குவீர்கள். குடும்பத்தைப் பொறுப்பாக பார்த்துக்கொள்வதிலும் அன்பு செலுத்துவதிலும் உண்மையாக இருப்பீர்கள்.

அனுஷம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் செவ்வாயை அம்சமாக கொண்டிருப்பீர்கள். உங்கள் வாழ்வில் ஏற்றமும் இறக்கமும், தடைகளும் தாமதங்களும் நிறைந்திருக்கும். அவசரப்பட்டு வார்த்தைகளை உபயோகித்து பிறகு வருந்துவது உங்கள் இயல்பாக இருக்கும். அனைத்தையும் மாறுபட்டு யோசிப்பதால் வெற்றி என்பது தாமதமாக இருக்கும். நல்லதையும் கெட்டதையும் சீர்தூக்கி பார்க்கும் குணத்தைக் கொண்டிருப்பீர்கள். அமைதியான குணத்தை கொண்டிருப்பீர்கள்.

குடும்பத்தோடு பாசமும், எதிர்பாலினரை எளிதில் வசீகரிக்கும் குணமும் கொண்டவர்களான நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் கடினமாக சூழ்நிலைகளை சாதுரியமாக கடந்துவிடுவீர்கள். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையையும் சமமாக  பாவிப்பதால் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் சோர்ந்து போகாமல் இருப்பீர்கள்.

Sharing is caring!