வாழ்க்கையில் பற்றிருந்தால் பிரம்மத்தை உணர முடியுமா?

பரம்பிரம்மமே என்று  இறைவனை சொல்கிறோமே. பிரம்மம் என்பது என்ன. உருவமில்லாதது என்று ஒன்று உலகில் இல்லையே. உருவம் இல்லாத  நெருப்பும், நீரும், ஆகாயமும், பூமியும் கூட  கண்களால் பார்க்க முடிகிறதல்லவா… இவ்வளவு ஏன் பஞ்சபூதங்களில் காற்றுக்கு உருவமும் இல்லை, பார்வையும் இல்லை ஆனாலும் காற்று என்ற ஒன்றை ஒப்புக்கொள்கிறோம். ஏனெனில் அது  தடையின்றி உணரப்படுகிறது.

பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருக்கும் பரமனால் படைக்கப்பட்ட அனைத்து சக ஜீவராசிகளில் மட்டுமல்ல.. படைக்கப்பட்ட அனைத்திலுமே உயிரற்ற பொருளோ உயிருள்ள பொருளோ எல்லாவற்றுக்கும் ஆதாரமான மெய்ப்பொருள் ஒன்று உண்டு என்று  அனைத்து உபநிடதங்களும் கூறுகின்றன. மெய்ப்பொருள் என்பது உருவமற்றது. முக்காலத்திலும் இது இருப்பதால்  தத் என்று அழைக்கப்படுகிறது. பிருஹ் என்ற சொல்லில் இருந்தே பிரம்மம் என்னும் சொல் உருவாகியது.

பிரக தாரண்ய  உபநிடதம்  பிரம்மம்  பற்றி சொல்லும் போது பிரம்மம் வடிவில்லாதது, அழிவில்லாதது… எந்நேரமும் இயங்கக்கூடியது என்று  கூறுகிறது. கதோ பநிடதத்தில் பிரம்மத்தை பற்றி சொல்லும் போது  நுணுக்கத்திலும் மிக நுணுக்கமான. இவற்றை கண்களால் காண இயலாது ஆனால் உணர முடியும் என்று யமதர்மன் நசிகேதனிடம் சொல்கிறார்.  ஆக கண்ணுக்குத்  தெரியாத அந்த சூட்சும சக்தியான பிரம்மத்தில்தான் பிரபஞ்சம்  தடையில்லாமல் இயங்கி வருகிறது.

பிரம்மம் ஆதி அண்டசராசரங்களுக்கும் அப்பாற்பட்டது.  உலகம் இருக்கும் வரை அவையும் இயங்கும். இருக்கும். ஆனால் அதைப்பார்க்க முடியாது.  பரமாத்மா, பிரம்மம்,  பிரபஞ்சம், சூன்யம், அசத், ஸத், சித், ஆனந்தம், மனம், வாழ்வு, உடல்  அனைத்தும் பிரம்மமே… நாம் வாழும் உலகில் நம் உடலை மனிதனாக பாவிக்கிறோம்.

நம்முடைய ஆத்மாவே ஜீவாத்மா.. பரமாத்மா என்கிறார்கள் . மனம் அறியாததை பரமாத்மா அறிந்து கொள்ளும். பிரம்மத்தை தொடர்பு படுத்தி பேசப்படும்  கருத்துகள் தான் மறுக்கப்படுகிறது. பிரம்மத்தை யாரும் மறுக்கவில்லை என்பதே பிரம்மத்தின் இருப்பை உறுதி செய்கிறது என்று அத்வைத வேதாந்தத்தின்  முடிவாக ஆதிசங்கரால் கூறப்பட்டுள்ளது. உண்மை, அறிவு, வரையற்ற தன்மை மூன்றும்  பிரம்மமாகிய பரமாத்வின் குணங்கள்.

பிரம்மத்தை  எப்படி அறிவது? ஆனால் இது மறைமுக அறிவு போன்றது. பிரம்மத்தைப் பற்றி நேர்முக அறிவு அல்லது நேர்மறை அறிவை  மெய்ஞான உள்ளுணர்வால் மட்டுமே அறிய முடியும். ஆனால் அவ்வாறு உணர்ந்தவர்கள் அதைப் பற்றி பேசுவதில்லை.

பேசி புரிய வைக்கவும் முயற்சிப்பதில்லை. வார்த்தையால் விளக்க முடியாத ஒன்றை எப்படி சொல்லி புரிய வைக்க முடியும். பிரம்மத்தை அறிய தன்னைத்தானே உணரும்  மெய்யுணர்வை முதலில்  அடைய வேண்டும். ஞானிகளும், ரிஷிகளும் அனைத்தையும் துறந்து உணர்ந்த பிரம்மத்தை மனித வாழ்க்கையில் பற்றுகொண்டிருக்கும் நம்மால் உணர முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

Sharing is caring!