“வாழ்வின் நல்ல நிலையில் ஆழமாக சிவனைக்கொள்” – ஐயடிகள் காடவெ கோன் நாயனார்…

ஐயடிகள் காடவர் கோன் நாயனார். இவர் திருத்தொண்டத்தொகையில் சுந்தரரால் அடியார்க்கும் அடியார் என்று போற்றப்பட்டுள்ளார். காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினைக் குறிக்கும் பொதுவான பெயர். ஐயனடிகள் என்பதையே ஐயடிகள் என்று குறிப்பிடுகிறோம். ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்னும் பெயர் தான் ஐயடிகள் காடவர் கோன் என்று அழைக்கப்படுகிறது.

ஐயடிகள் காடவர் கோன் நாயனார் சிறப்பாக ஆட்சி புரிந்த பல்லவர் குலத்தில் பிறந்தவர். பல்லவர்களின் தலைநகரமான காஞ்சியில் பல்லவ பேரரசருள் ஒருவராக திகழ்ந்தார். மக்கள் எவ்வித துன்பமும் துயரமுமின்றி வாழ சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தார். வீரத்திலும் விவேகத்திலும் சிறந்தவரான இவர் சிவபெருமானிடத்து மிகுந்த பக்தியும் அன்பும் பூண்டவர்.

வடமொழியிலும் தமிழ் மொழியிலும் புலமை மிக்க இவரது ஆட்சியில் கலைகளும் தமிழ் மொழியும் செம்மைப்படுத்தப்பட்டது. ஊக்குவிக்கப்பட்டது. ஆட்சியினூடே சிவனை தரிசிப்பது இவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. மக்கள் குறையில்லாமல் வாழும் அதே நேரம் எவ்வித குறையில்லாமல் சிவபெருமானை வழிபடுவதையும் விடாமல் கடைப்பிடித்தார்.

நாளடைவில் அரச பதவியால் சிவனை முழு நேரமும் நினைக்க முடியவில்லை என்று தன்னுடைய புதல்வனை அழைத்து அவனை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அனைவரிடமும் சிவத்தொண்டு புரிய விடைபெற்றார். இவர் சிவாலயங்கள் தோறும் சென்று திருப்பணி செய்து மகிழ்ந்தார்.  சிதம்பரம் முதலான முக்கிய தலங்களில் சென்று வழிபட்டு ஒவ்வொரு வெண்பாவால் அத்தலங்களைப் போற்றி பாடியுள்ளார்.

உள்ளம் உருக பாடி சிவனையும் சிவனடியார்களையும் மகிழ்வித்தார். இவற்றின் தொகுப்பு தான் சேத்திரத் திருவெண்பா என்று அழைக்கப்படுகிறது. ஐயடிகள் காடவன் கோன் நாயனார் சிவத்தலங்களில் சென்று பல வெண்பாக்களைப் பாடினாலும் அவற்றுள் 24 பாடல்களே கிடைத்திருக்கின்றன. 11 ஆம் திருமுறையில் சேத்திரத் திருவெண்பா என்னும் தலைப்பில் இடம்பெற்றிருக்கிறது.

ஐயடிகள் காடவர் கோன் நாயனார் தம்முடைய ஒவ்வொரு பாடலிலும் இவ்வுலக வாழ்வில் நிலையாமை, ஒவ்வொருவரும் இறுதிகாலத்தில் அனுபவிக்க நேரும் வேதனைகள் இவற்றைக் குறிப்பிட்டு பாடியிருக்கிறார். இத்தகைய துன்பங்களுக்கு ஆளாகமல் இருக்க அனைவரும் வாழ்வின் நல்ல நிலையிலேயே ஆழமாக சர்வேஸ்வரனை பற்றிகொள்ளுங்கள் என்று ஆன்மிக பாதைக்கு நம்மை அழைத்து சென்றிருப்பார்.

இப்படிச் சிவபெருமானை செந்தமிழால் போற்றி ஆலயத் திருப்பணி செய்து இறுதியில் சிவப்பெருமானின்திருவடிகள் பற்றினார்.  சிவாலயங்களில் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஐயடிகள் காடவர் கோன் நாயனாருக்கு குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Sharing is caring!