விநாயகர் சிறப்புக்கள் சில…

கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர்.

விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது.

இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.

சித்தி புத்தி விநாயகர்

விநாயகர் தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று தான் ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார் என்பார்கள்.

இவர் தன்னை வழிபடும் அடியவர்களுக்கு காரிய சித்தியும், அதற்குரிய புத்தியையும் கொடுக்கும் பண்புகளையே தன்னுடைய இரண்டு மனைவிகளாய் கொண்டு சித்தி புத்தி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

’உ’ என்பது யஜுர் வேதத்தின் சாரம். ஒரு செயல் தொடங்குவதிலிருந்து, முறையாக நடந்து, சரியாக முடிந்து, நிறைவான பலன் கிட்டும் வழியை விரிவாகச் சொல்கிறது இந்த வேதம்.

முன்வினை, பின்வினை, செய்வினை என்ற எல்லா வினைகளுக்கும் நாயகன் விநாயகன். ஆகவேதான், எந்தச் செயலையும் தொடங்கும் முன்பாக பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.

விநாயக சஷ்டி விரதம்

கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் மார்கழி மாதத்து சுக்லபட்ச சஷ்டி முடிய 21 நாள்களும் விநாயகரை வழிபட அனுஷ்டிக்கப்படும். இவ்விரதத்தில் 21 இழைகளினால் ஆன காப்புக்கயிற்றினை கணவனும்-மனைவியும் வல இடக்கரங்களில் அணிந்து விரத நோன்பை மேற்கொள்வர். முடிவு நாட்களில் பலவிதமான உணவுகளைப் பிறருக்குத் தானமாகக் கொடுத்து விரதத்தை முடிப்பர்.

செல்வம் கல்வி மேம்பட

விநாயகர் சதுர்த்தியன்று காரிய சித்திமாலை பாடல்களை பாடி அவரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றி பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பங்கள் எளிதில் நிறைவேறும்.

சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.

அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

சங்கட ஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டு முறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலை பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என சாஸ்திரம் விளக்குகிறது.

கொழுக்கட்டை நைவேத்தியம்

தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்துச் செய்யப்படும் மோதகம் என்றழைக்கப்படும் கொழுக் கட்டை கணபதிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம் ஆகும்.

கொழுக்கட்டையின் தத்துவம்

மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம், நமக்குள் இருக் கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது.

மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளி யில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

தோப்புக்கரணம்

கரணம் என்றால் மனம், புத்தி, சித்தம், அஹங்காரம். இவைகளைத் தோற்பது தோற்புக்கரணம் எனலாம். விநாயகர் முன் இவைகளையெல்லாம் இழந்து தூய்மை அடைய வேண்டும் என்றும், நாம் நமது தவறை உணர்ந்து வந்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என வேண்டுவதே தோப்புக்கரணம்.

காயத்திரி மந்திரம்

தத் புருஷாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தன்னோ தந்தி பரசோதயாத்

Sharing is caring!