வியர்க்குருவை விரட்ட பாட்டி வழிதான் சிறந்தது…

கோடைக்காலத்தில் எவ்வித பேதமின்றி தாக்கும் ஆரோக்ய பாதிப்பில் முதன்மையானது வியர்க்குரு பிரச்னை. வெயிலில் நேரடியாக சென்றால் தான் வியர்க்குரு பிரச்னை வரும் என்பதில்லை. உடலில் இருந்து வெளியேறும் வியர்வையை உடலில் அணியும் ஆடைகள் உறிஞ்சாமல் இருந்தாலும் வரும். அதனால் தான் வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகள் அணிய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக நம் நாடு வெப்பம் மிகுந்த நாடு என்பதால் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் உணவு பழக்கங்களும், வாழ்க்கை முறைகளும்  வரையறுக்கப்பட்டிருந்தது.

கொளுத்தும் வெயிலின் தாக்கம் கடந்த  10 வருடங்களாக அதிகரித்து வருகிறது. பணிக்கு செல்வோர்கள், வெளியில் பணியை கொண்டிருப்பவர்கள்  அதிக வியர்வையால் பாதிக்கப்படுவது போலவே வீட்டில் இருக்கும் பிறந்த குழந்தைகள் முதல் வயதான முதியோர்கள் வரை வியர்க்குரு பிரச்னையால் பாதிக்கப்படுவது சகஜமாகிவிட்டது.

வியர்வை சுரப்பிகளிலிருந்து சருமத்தின் வெளிப்புறம் வியர்வை வெளியேற வர உதவும் துவாரங்களில் அடைப்பு இருந்தால் வியர்வை உண்டாகும். எல்லா காலங்களிலும் இத்தகைய பிரச்னைகள் வந்தாலும் கோடைக்காலங்களில் அதிகமாக வியர்வை சுரக்கப்படும் போது வெளிவர முடியாமலேயே சிவந்த கொப்புளங்கள் சிறிய அளவில் உண்டாகின்றன. ஒருபுறம் சருமத்தில் காற்று செல்லாமை, மசாலாக்கள் நிறைந்த உணவு, ஜங்க்ஃபுட் உணவுகள், நீர்ச்சத்து குறைபாடு போன்றவையும் கூட  வியர்க்குருவை அதிகப்படுத்திவிடுகிறது.

ஆரம்பத்தில் வியர்க்குரு வரும்போதே அதைத்தவிர்த்துவிட்டால்  வியர்க்குருக்கள் உடலில் பரவாது. சில நேரங்களில் வியர்க்குருக்களை கவனிக்காமல் விட்டால் வேனிற்கட்டிகளை உண்டாக்கிவிடும். சருமத்தை சிவந்த நிறமாக்கிவிடும். வியர்க்குரு மூடும் வகையில் ஆடைகள் அணியும் போது அரிப்பும், தடிப்பும், எரிச்சலையும் அதிகமாக்கும். சில நேரங்களில் வீக்கத்தையும் ஏற்படுத்தி விடும். வியர்க்குரு, வேனிற்கட்டி, சரும எரிச்சல், தடிப்பு அனைத்தையும் ஓட ஓட விரட்டிய பாட்டி வைத்தியம் கைகொடுக்கும்.

* வேப்பிலையுடன் கிழங்கு மஞ்சளை நசுக்கி வியர்க்குரு இருக்கும் இடங்களில் பற்றுபோட்டு அரைமணி நேரம் கழித்து குளித்து வரலாம். வியர்க்குரு பரவாது.  அரிப்பு, நமைச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்தும் விரைவில் நிவாரணம் அடைய லாம்.

* பச்சிளம் குழந்தைகளுக்கு மிருதுவான சருமம் என்பதால் வியர்க்குருவால் அவதிப்படும்போது இளங்குறுத்து வேப்பிலையை எடுத்து வியர்க்குரு மேல் இதமாக தடவி விடலாம்.

* சந்தனக்கட்டையின் மீது பன்னீர் தெளித்து  உரைத்து சந்தனத்தை வியர்க் குருவின் மீது பூசி வந்தால் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாக இருக்கும்.  சந்தனம் காய காய  உரைத்து போட்டுக்கொண்டே இருந்தால் அதிக பாதிப்பின்றி தப்பிக்கலாம்.

*  நுங்கு நீரை சருமத்தின் மீது பூசி வருவதன் மூலம் சருமப் பாதிப்பு எதுவாக இருந்தாலும்  முற்றிலும் நீங்கி விடும்.  கற்றாழை ஜெல்லையும் வியர்க்குருவின் மீது தடவினால் குளிர்ச்சியாக இருக்கும்.

* கோடைக்காலங்களிலாவது சோப்பு கட்டிகளை உபயோகிக்காமல் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு கலந்த மாவை பயன்படுத்தி தேய்த்து குளிப்பது நல்லது.

* குளித்து முடித்தவுடன் ஈர சருமத்துடன் பவுடரை போடாமல் சருமத்தை நன்றாக உலரவிட்டு பவுடர் போடவேண்டும். இயன்றவரை அதிக மேக்கப்  போடுவதும் நல்லதல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  காட்டன்  ஆடைகளை அணிவதே நல்லது.

Sharing is caring!