விரதம், வழிபாடு, பிரார்த்தனைகளை இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்பதே உண்மை…

அன்றாடம் இறைவனை வணங்குகிறோம். காலை, மாலை தவிர கிடைக்கும் நேரம் முழுவதும் அவனிடமே சரணடைகிறோம். கோபுரங்களைக் கண்டாலே குனிந்து வணங்குகிறோம். வீட்டிலும் கிடைக்கும் நேரங்களிலும் புகழ்பெற்ற புராதானமிக்க கோயில்களுக்குத் தேடிச் சென்று வழிபடுகிறோம். ஆனாலும் அவ்வப்போது இறைவனிடம் கோபம் கொள்கிறோம். ஏன் இந்த மனமாற்றம்.

நினைத்தது நடக்கவில்லை. கேட்டது கிடைக்கவில்லை என்னும் கோபம் சட்டென்று நம்மை ஆக்ரமித்துக்கொள்கிறது. இதனால் மனம் வெதும்பி பிதற்றுகிறோம். தொடர்ந்து கஷ்டம் கொடுக்கிறாய் என்று இறைவனிடம் மல்லுக்கு நிற்கிறோம். எல்லோருமே ஏதோ ஓர் சூழ்நிலையில் தமக்கு ஏற்படும் கோபத்தை இறைவனிடமும் காண்பிக்க தவறுவதில்லை என்பது தான் உண்மை.

இறைவனை முழுமையாக வணங்க வேண்டும். ஒரு முக கவனத்துடன் இறை நாமம் சொல்ல வேண்டும் என்பது தான் நம்முடைய முழு விருப்பமும். ஆனால் எண்ணங்கள் போலவே எல்லாம் நடப்பதில்லை. மனதின் மூலையில் இருக்கும் அசுரசக்தியானது  நம்முடைய பிரச்னைகளை முன் கொண்டு வந்து மனதை குழப்பி இறைவனை வழிபடுவதைத் தடை செய்கிறது. பிரச்னைகளைப் பற்றி மட்டுமே இறைவனிடம் எடுத்துரைக்க வைக்கும் மாயையை உண்டாக்கி விடுகிறது. இதனால் நம்முடைய கவனம் முழுமையாய்  இறைவனை சென்றடைவதில்லை. மாறாக இறைவனிடம் புலம்ப தொடங்குகிறோம். சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் முறையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கும் நாம் மனதை மட்டும் முழுமனதுடன் நம்பிக்கையாக அர்ப்பணிப்பதில்லை என்பதே உண்மை.

இறைவன் புனிதத்தன்மையுடையவனா? அன்பானவனா? மனதில் கள்ளமில்லா தவனா? பொய் உரைக்காதவனா? என்று பார்த்து யாரையும் ஆசிர்வதிப்பதில்லை. நம்மை உருவாக்கியவன் என்பதால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்ல எண்ணங்களை உண்டாக்கி அதன் மூலம் அவன் நன்மையடைய வேண்டும் என்பதையே விரும்புகிறார். நம்முடைய கர்மாவின் படி தான் எல்லாம் நடக்கும் என்றாலும் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் இறைவன் மனிதனுக்குள் தர்ம சிந்தனையை  உருவாக்க மட்டுமே முயற்சி செய்வார். மாறாக நீ எனக்கு இதைச் செய்தால் நான் உனக்கு இதைச் செய்கிறேன் என்ற பேரமெல்லாம் இறைவனிடம் எடுபடாது. இதை மனதில் வைத்து வழிபடும் விரதம், வழிபாடு, பிரார்த்தனைகளை அவன் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்வதுமில்லை.

எல்லாம் அறிந்த இறைவன் நம்மை பார்த்துக்கொள்வார் என்னும் நம்பிக்கை இருக்கும் போது இறைவனிடம் தனியாக கோரிக்கை வைக்க வேண்டியதில்லை. மனம் முழுக்க இறைவனை நிரப்பி ஒருமுகத்தோடு வழிபட்டாலே இறைவனது அருள் தானாக கிடைக்கும். உள்ளார்ந்த அன்புடன் உள்ளுக்குள் பக்தி மணத்தோடு ஆன்மிக சக்தியையும் உணர்வீர்கள்.

Sharing is caring!