விருந்துக்கு வந்த சாய்பாபா

டியோ என்றொரு சாய்பாபாவின் பக்தர் இருந்தார். அவரைப் பார்க்க ஒரு நாள் மதத் துறவி ஒருவர் வந்தார். அவர் டியோவை பார்த்து பசுக்களைப் பாதுகாப்பதற்காக புதிதாக சங்கம் ஒன்றை ஏற்படுத்தி இருப்பதாகவும், அதற்கு நன்கொடை வழங்குமாறும் கேட்டார். அதற்கு டியோ, தமது கிராமத்தில் ஏற்கெனவே அது போன்ற சங்கம் ஒன்று ஆரம்பித்து நடத்தி வருவதாகவும், அதற்கு வேண்டிய உதவிகளைத் தான் செய்து வருவதாகவும் கூறி  நன்கொடை அளிக்க சூசகமாக மறுத்து விட்டார். அந்தத் துறவியும் ஏமாற்றத்துடன் சென்று விட்டார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சில தினங்கள் கழித்து, டியோ வீட்டில் ஏதோ ஒரு முக்கிய விசேஷம். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பிராமணர்களுக்கு உணவு படைப்பது வழக்கம் அந்த விருந்தில் சாய்பாபாவும் கலந்து கொள்ள வேண்டும் என்பது டியோவின் ஆசை, தன் விருப்பத்தைக் கடிதம் மூலம் சாய்பாபாவிற்குத் தெரியப்படுத்தினார்.

சாய்பாபாவும், தான் உட்பட மேலும் இருவர் அந்த விருந்துக்கு வருவதாக வாக்களித்து, கடிதம் ஒன்றை எழுதி அனுப்புமாறு தனது பக்தர் ஜோக்கிடம் தெரிவித்தார். அவரும் அப்படியே செய்தார். சரியாகவே விசேஷ நாள் வந்தது. நிறைய பிராமண சாதுக்கள் அங்கு வந்து நிரம்பி வழிந்தார்கள். ஆனால் டியோ பெரிதும் எதிர்பார்த்த சாய்பாபாவை மட்டும் காணவில்லை. டியோ சாய்பாபா வராததை கண்டு கவலை ஆனார்.
அப்போது, ஏற்கெனவே நன்கொடை கேட்டு வந்த துறவி, அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும் டியோவிற்கு கலக்கம் ஏற்பட்டது. ‘மறுபடியும் நன்கொடை கேட்டு நச்சரிக்க வந்துவிட்டார் போலும்” என்று நினைத்தார்.

ஆனால், அவர் மனதை நன்கு புரிந்து கொண்ட அந்தச் சாது, பயப்படவேண்டாம்,  நான் நன்கொடை எதுவும் கேட்டு வரவில்லை. தங்கள் விருந்தில் பங்கேற்க விருப்பம் கொண்டே வந்திருக்கிறேன். கலந்து கொள்ள அனுமதிப்பீர்களா? என்று பவ்யமாகக் கேட்டார் சாது.
இப்படிக் கேட்டதும் பூரித்துப் போனார்,  டியோ மகிழ்ச்சியுடன் மனமுவந்து அனுமதித்தார். அப்போது அந்த சாது,” தன்னுடன் மேலும் இரண்டு பேர் வெளியே காத்திருப்பதாகவும் ,அனுமதி அளித்தால் அவர்களையும் உள்ளே அழைத்து வரக் காத்திருக்கிறேன் ” என்றார் . அவர்களையும் விருந்தில் பங்கேற்க சந்தோஷத்துடன் அனுமதித்தார் டியோ. விருந்து முடிந்தது. சாய்பாபா வருவதாக வாக்களித்துவிட்டு வராமல் போனது “ஒரு வாக்கு வழுவல்” ! என்று கோபத்துடன் குற்றம்சாட்டி ஷீரடிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார் டியோ .

அதற்கு சாய்பாபா தன் பக்தர் ஜோக்கிடம்,”விருந்தில் நான் கலந்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக டியோ குற்றம்சாட்டி இருக்கிறான். முட்டாள். விருந்தில் கலந்து கொண்டவர்களைச் சரியாகவே அவன் கவனிக்காமல் என்னைக் குற்றம் சுமத்துகிறான். நான்தான் சொன்ன மாதிரியே இரண்டு சாதுக்களுடன் அவன் விருந்தில் கலந்துகொண்டேனே  இதனைத் தெளிவாக அவனுக்கு எழுதி அனுப்பு” என்று உத்தரவிட்டார்
பதில் கடிதத்தைக் கண்ட டியோ துணுக்குற்றார்.

அப்படியானால் தன்னிடம் நன்கொடை கேட்டு அணுகியதும், விருந்தில் மேலும் இரு சாதுக்களை அழைத்துக் கொண்டு வந்ததும் சாய்பாபா என்பது இப்போது தான் பிரிந்தது. சாய்பாபாவைச் சரியாகக் கவனிக்காமல் இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவரை ஆட்டுவித்தது.                                                                                                                    ஓம் ஸ்ரீ சாய்பாபா

Sharing is caring!