விருப்பம், ஞானம், செயல்.. மூன்றும் தரும் முப்பெரும் தேவியர்!

பெண்களை முன்னிறுத்தி, பெண்களே விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது நவராத்திரித் திருவிழா. பண்பாடு, கலை, கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் விழாவாகத் திகழ்வது கூடுதல் சிறப்பு.

சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே நவராத்திரி வைபவத்தின் தாத்பரியம்.இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளையும் ஒருங்கே பெறுவதற்கான ஒப்பற்ற வழிபாடு இது. இச்சை என்றால் விருப்பம்,ஆசை. ஞானம் என்றால் அறிவு, புத்திக்கூர்மை, கிரியா என்றால் செயல், காரியம் என்று அர்த்தம். இதற்கான முப்பெரும் தேவிகளை வணங்குவதே நவராத்திரியின் சிறப்பு. இந்த வைபவத்தை, சாரதா நவராத்திரி என்றும் சொல்லுவார்கள்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கை, லக்ஷ்மி,சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரையும் ஆத்மார்த்தமாக வணங்கி, உரிய முறையில் விரதம் மேற்கொண்டு பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு மனோபலம் பெருகும். வீட்டில் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும்.அவர்களோ அவர்கள் வீட்டுக் குழந்தைகளோ… கலைகளில் சிறந்து விளங்குவார்கள். ஐஸ்வரியங்கள் அனைத்தையும் பெற்று ஆனந்தமாய் வாழ்வார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

Sharing is caring!