விரைவில் உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

கடுமையான உடற்பயிற்சி,  உணவு கட்டுப்பாடு மேற்கொண்டும் எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என சொல்பவர்கள் அநேகம் பேர். அவர்கள் செய்யும் சில தவறுகளால், எவ்வளவு முயற்சி செய்தும் உடல் பருமனை குறைக்க முடியாமல் போய்விடுகிறது. எந்ததெந்த விஷயங்களில் கோட்டை விடுவதால் உடல் பருமனை குறைக்க முடிவதில்லை என பார்க்கலாம்.

சரியான உணவு இடைவேளைகளில் உணவை தவிர்ப்பது:

உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ அதேபோல சரியான உணவு இடைவேளையில் உணவை உட்கொள்வது என்பதும் மிக முக்கியமான ஒன்று. பசி எடுக்கும் நேரங்களில் சிலர் முறையான உணவை அதாவது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருக்கும் உணவை தவிர்த்து நொறுக்கு தீணிகளை உட்கொள்வதும், அவசர அவசரமாக போதுமான அளவு உணவை எடுத்து கொள்ளாமல் இருப்பதும், உடல் பருமனை குறைப்பதை கடினமாக்குகிறது.

தேவையான கலோரி நிர்ணயம் செய்யாமல் இருப்பது:


உடல் எடையை கட்டுக்கோப்போடு வைத்துக்கொள்ள எரிசக்தியின் அளவை நிர்ணயிப்பது அவசியம். அன்றாட உடல் உழைப்பிற்கு ஏற்ற அளவு மட்டுமே கலோரி எனப்படும் எரிசக்தியை உட்கொள்ள வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள கலோரிகளின் அளவை கவனிப்பதன் மூலம் உடல் பருமன் விரைவில் குறைவது சாத்தியப்படுகிறது.

வெளி உணவுகளை சாப்பிடுவது:

வெளி உணவுகளை சாப்பிடும் பொழுது புரதம், கொழுப்பு போன்றவற்றை தேவைக்கு அதிகமாக உட் கொள்ள நேரிடும். அதேபோல, அதிக கலோரிகள் இல்லாத காய்கறி சேலட் போன்றவற்றை வெளியில் சாப்பிட்டாலும் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.  எனவே முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவை உட் கொள்வதும். அந்த உணவில் நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவை சரியான அளவு இருப்பதை உறுதி செய்வதும், உடல் பருமனை விரைவில் குறைக்க உதவும்.

சாப்பிடுவதற்கான முறைகளை பின்பற்றாமை:

சாப்பிடுவதற்கான சரியான வழிமுறைகளை பின்பற்றுவது உடல் பருமனை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். அதாவது சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாகவும், பின்பாகவும் தண்ணீர் அருந்துவது. சிறிய தட்டில் உணவை வைத்து சாப்பிடுவது. தட்டில் அதிகமாக காய்கள் மற்றும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருப்பதை உறுதி செய்வது. சாப்பிடும் பொழுது தொலைக்காட்சி, கைபேசி போன்ற இடையூறுகள் இன்றி உணவில் முழுமையாக கவனம் செலுத்தி சாப்பிடுவது, இது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதனால் உடல் பருமன் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சரியான நேரத்திற்கு சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமை:

சரியான அளவு தூக்கமின்மை உடல் பருமனுக்கு மட்டுமல்ல, உடலில் பல நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாயம் மிக்கவை. எனவே, தினமும் தேவையான நல்ல தூக்கத்தை பெற வேண்டியது மிகவும் அவசியம். கண்டிப்பாக 7 மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரம் வரை  தூங்க வேண்டும். இவ்வாறு தூங்குவதனால் மறு நாள் காலையில் உடல் புத்துணர்வுடன் செயல்படுவதோடு உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

மேற்கண்ட ஐந்து பழக்கங்களையும், வழக்கமாக்கிக் கொண்டால் நிச்சயம் நம் உடல் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. நாம் ஏன் இவற்றை முயற்சி செய்து பார்க்கக்கூடாது.

Sharing is caring!