வெற்றி நிச்சயம்…பரமாத்மா துணையிருந்தால் நிச்சயம்

பரமாத்மாவின் துணை இருந்தால் போதும் பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் வெற்றி பெறலாம் என்பதை விளக்கும் மகாபாரதக் கதை இது.  பாண்டவர்களும், கெளரவர்களும் போருக்கு தயாரானார்கள். இருவருமே தங்கள் படைகளைப் பெருக்கிக்கொண்டிருந்தனர்.

துவாரக மன்னன் கிருஷ்ணரின் படைகள் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று  கெளரவ அரசனான துரியோதனனும், சகுனியும் நினைத்தார்கள். கண்ணனுக்கு பாண்டவர்கள் நண்பர்களாயிற்றே அதனால் முன்கூட்டியே சென்று படைகளை கேட்கிறேன் என்று துரியோதனன் புறப்பட்டான்.

கிருஷ்ணரின் அரண்மனைக்குள் கம்பீரமாக நுழைந்தான் துரியோதனன். அவன் பின்னாடியே வந்த அர்ச்சுனன்  கண்ணனின் காலடியில் அமர்ந்தான்.  அரசனாக இருந்தாலும் மாடு மேய்த்தவனாயிற்றே இவன் பாதத்திலா அமரவேண்டும் என்று நினைத்த துரியோதனன் கண்ணனின் தலைமாட்டில் அமர்ந்தான். இருவருமே கண்ணன் உறக்கத்திலிருந்து கலைவதற்காக காத்திருந்தனர்.

படைகளை கேட்டுவிட்டால் என்னாவது என்று துரியோதனனும்,  நாம் கேட்க வந்ததை முன்கூட்டியே துரியோதனன் கேட்பானோ என்று அர்ச்சுனனும் நினைத்து கொண்டிருந்த வேளையில் உலகை ஆளும் கண்ணன் உறக்கத்திலிருந்து எழுவது போல்  அசைந்தார்.

பாதத்தில் அமர்ந்திருந்த அர்ச்சுனன் முதலில் கண்ணுக்கு புலப்பட ”வா..வா அர்ச்சுனா… நலமாக இருக்கிறாயா.. எல்லோரும் நலமா?” என்று  கேட்டபடி எழுந்தார்.  ”ஆனால் முதலில் வந்தவன் நான் தான். அதனால் என்னை தான் விசாரிக்க வேண்டும்” என்றான் துரியோதனன் குரலில் கம்பீரத்தைக் காட்டியபடி..

புன்னகைத்த கண்ணன் ”நான் விழித்ததும் பாதத்தில் இருந்த அர்ச்சுனனைதான் கண்டேன். இருந்தாலும் பரவாயில்லை உன்  விருப்பப்படி நீயே சொல். துரியோதன மகாராஜா தேடி வந்த காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?” என்றான். ”பாரதப்போரில் உன் உதவி தேவை என்பதைக் கேட்கவே வந்தேன்  கண்ணா” என்றான் துரியோதனன்.

”நிச்சயமாக என்னுடைய படைகள் அனுப்ப வேண்டுமா. அல்லது நான் மட்டும் வந்தால் போதுமா? நான் மட்டும் வருவதானால் ஆயுதம்  எதுவும் ஏந்த மாட்டேன்” என்றான் கண்ணன். ’ஆஹா நாம் கேட்க வந்ததே படைகள்  தான். கண்ணனே  கொடுத்து விட்டானே’ என்று நினைத்த துரியோதனன். ”உன்னுடைய படைகள் மட்டும் அனுப்பு கண்ணா. அதுவே போதும்” என்றபடி விடைபெற்றான்.

ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்த அர்ச்சுனனிடம் ” நீ ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறாய் அர்ச்சுனா? நீயும் என்னுடைய படைகளை எதிர்பார்த்து வந்தாயா? ஆனால் படைகள் அனுப்புவதாக அர்ச்சுனனுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அதனால் நான் உங்களுக்கு உதவியாக   வருகிறேன். அதே சமயம் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்றும் வாக்களித்திருக்கிறேன். அதனால் உனக்கு தேரோட் டியாக வரவா?” என்றார்.

அர்ச்சுனனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.  ”பரமாத்மாவே..  நீ துணையாக இருந்தால் போதும்.  நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம். நீ எங்கே  துரியோதனனுடன் சென்று விடுவாயோ என்றுதான் அஞ்சினேன். நல்ல வேளை அவன் படையைக் கேட்டான் ”என்றான் மகிழ்ந்தபடி.
மகாபாரத யுத்தம் 18 நாட்கள் நடந்தது.

கண்ணன் சாரதியாக இருந்து ஒவ்வொரு தருணத்திலும் அர்ச்சுனனுக்கு காவல் காத்தான்.  பாண்டவர்கள் வெற்றி பெற்று தருமன் அஸ்தினாபுரத்து அரசனாக முடி சூடிக்கொண்டான்.   நமது பணிவுதான் நமக்கு பெரும் துணையாக இருக்கும் என்பதை இதிகாச கதைகள் உணர்த்தினாலும் பரமாத்மாவின் துணையிருந்தால் எப்போதும் வெற்றியும் உடன் இருக்கும் என்பதும் புலனாகிறதல்லவா…

Sharing is caring!