வெஸ்டர்ன் கழிப்பறை ஆபத்தா? ஆரோக்யமா?

உடல் ஆரோக்யம் காக்க அனுதினமும் காலைக் கடன் கழிக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் உடலில் இருக்கும் கழிவுகள் முழுமையாக வெளியேறினால் உடலின் ஆரோக்யம் மேம்படும். நோய்கள் தங்கும் கூடாராமாக உடல் மாறுவதற்கு மலச்சிக்கலும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

நம்மைச் சுற்றி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியே தள்ளும் நாம் உடலில் இருக்கும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும். உடல் கழிவுகளை அவ்வப்போது வெளியேற்றுவது நல்லது என்று மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். அதிகாலையில் ஆற்றங்கரையோரமோ, குளத்தங்கரையோரமோ, வேலி ஓரமோ கையில் செம்போடு காலை கடனை முடித்த தலைமுறைகள் படாத அவஸ்தையை இன்று பெரும்பாலான மக்கள் படுகிறார்கள். நாகரிக வளர்ச்சியில் வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட தொடங்கினோம். ஆனால் இவற்றிலும் நம்  முன்னோர்கள் உடலின் நன்மைக்கேற்றவாறு  உடல் கழிவுகள் தேக்கமின்றி வெளியேற்றும் வகையில் கழிவறைகளை அமைத்திருந் தார்கள்.

கால் மூட்டுகளை மடக்கி குத்து கால் இட்டு அமர்ந்திருக்கும் நிலையில் பிட்டமும் பாதமும் ஒரே மட்டத்தில் தரையில் அமர்வது போன்ற கழிப்பறைகள் தான் பயன்படுத்தினார்கள். இப்படி அமர்ந்து மலம் கழிக்கும் போது குடலில் இருக்கும் கழிவுகள் ஒதுங்காமல் வெளியேறியது. மலக்குடலின் வளைவு நேராகி மலம் கழிப்பது எளிதாக இருந்தது. ஆனால் தற்போது மேற்கத்திய பாணி கழிவறைகளையே மக்கள் விரும்புகிறார்கள். மூட்டு வலி, வயோதிக காரணங்களால் அமைக்கப்பட்ட இக்கழிவறைகளை அனைத்து மக்களும் பயன்படுத்துவது நிச்சயம் ஆரோக்யமானதல்ல என்கிறார்கள்.

குழந்தை கருவில் இருக்கும்போதே இந்த நிலையில் தான் இருக்கும் இதுதான் இயற்கையாக காலைக் கடனை கழிக்கும் முறை. இம்முறையில் அமரும்போது இடுப்பு எலும்புகள் வலுப்பெறும். தசைகள் வலிமையடையும். வயிறு, குடல் போன்ற பாகங்கள் ஆரோக்யத்தைக் கண்டது. மலக்கழிவுகள் வயிற்றில் தங்காத நிலையில் வயிறு உபாதைகள் பிரச்னைகள் வரமால் இருந்தது. ஆனால் கடந்த 10 வருடங்களாக வயிறு சம்பந்தமான உபாதைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இயற்கை முறையை மீறிய வெஸ்டர்ன் கழிவறை பயன்படுத்தும்போது மலக்குடலின் இயல்பு வடிவம் பாதிக்கப்படுகின்றது. மூலநோய், மலச்சிக்கல், குடல் சம்பந்தமான நோய் போன்றவைகள் அதிகரித்து வருகின்றன. ஒரு புறம் வாழ்க்கை முறை, உணவு மாற்றம் என்று சொன்னாலும் இயற்கைக்கு மாறான வெஸ்டர்ன் கழிவறைகளும் இதற்கு காரணம் என்று கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கர்ப்பிணிகள் இந்த மாடர்ன் கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது மலச்சிக்கல் பிரச்னை இருக்கும் பட்சத்தில் வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியதாக இருக்கும். இந்த அழுத்தமானது மலக்குடலை பாதிக்க செய்யும் இதனால் மலக்குடல் வழியே இரத்த கசிவும் உண்டாக வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

கொஞ்ச நேரம் சிரமப்பட்டு கால்களை குத்தவைத்து உட்கார்ந்து உடல் ஆரோக்யம் காப்பதுதான் நல்லது என்பதால் இந்திய கழிவறைகளை பயன்படுத்துங்கள்.

Sharing is caring!