ஷீரடியில் சாய் பாபா!

“ஷீரடி” என்பது ஒரு கிராமம். இது  மகாராஷ்டிரா மாநிலத்தில், கோதாவரி நதி பாயும் பகுதியான அகமத் நகர் மாவட்டத்திலுள்ள கோபர்கான் என்னும்  இடத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அச்சமயத்தில் அங்கே சுமார் 400 முதல் 500 வீடுகள் மட்டுமே இருந்தன.  அங்கே பெருமளவு இந்துக்கள் மட்டுமே இருந்தனர். சிறிய அளவு மட்டுமே முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த கிராமத்தில் ஒதுக்குப்புறமாக ஒரு வேப்பமரம் இருந்தது. அம்மரத்தின் கீழே அழுக்கான நைந்த ஒரு சிறிய கைக்குட்டை ஒன்றினைத் தலையில்  கட்டியவாறு முஸ்லிம் இளைஞர் போன்ற தோற்றத்தில் பதினாறு வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருந்தார்.

அவர் 24 மணிநேரமும் ஆழ்ந்த தியானத்திலேயே இருந்து வந்தார். அவ்வப்போது காட்டுகுள் சென்று மறைந்து விடுவார். அங்கே மணிக்கணக்காச் சுற்றித்திரிவார். எதைத்தேடி அவரது அலைச்சல் இருந்தது என்பது யாருக்கும் தெரியாது.  பின்னர் அந்த வேப்பமரத்தின் கீழே அவராகவே வெட்டி வைத்திருந்த பள்ளத்தில் படுத்து உறங்குவார்.

அந்தக் கிராமத்து மக்கள் இந்த இளைஞனை வியப்பாக பார்த்தனர். அப்போது இவர் யார், எதற்காக இங்கே வந்திருக்கிறார், அவருக்கு என்ன வேண்டும் என்றெல்லாம் கேட்பார்கள். ஆனால் எதற்குமே அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காது. அந்த மக்களுடன் எவ்விதப் பழக்கமும் அவர்  வைத்து கொள்ளவில்லை. அவர்
பசிக்கும் போது என்ன உண்கிறார் என்பது கூட அம்மக்களுக்கு தெரியாது.

அதனால் , அந்த இளைஞருக்கு மனநோய் என்றும், புத்திசுவாதினம் இல்லாதவர் என்றும் பலரும் நினைத்தனர். அதனால் அவரை அக்கிரமத்து மக்கள் மதிப்பதோ, மரியாதை தருவதோ இல்லாமல் அவரை ஒரு மனிதனாக கூட நடத்துவது இல்லை. சிறு பிள்ளைகள் அவர் மீது கல்லெரிந்து விளையாடினர்.

Sharing is caring!