ஸ்ரீ கிருஷ்ணனின் அருளால் சிறப்பான வாழ்க்கை !

விதியின் வழியே செல்லும் இருட்டு  வாழ்க்கையை மதியால் கடக்க  கட வுள் நம்பிக்கை என்னும் விளக்கு ஒளியை  கையில் எடுத்துச்செல்ல வேண்டும் என்கிறார்கள் அனுபவமிக்கவர்கள். அப்படி கேளாததால் தான் பாண்டவர்கள் கெளரவர்களிடம் நாட்டை இழந்து  இழிநிலைக்கு உண்டாகி மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணனின் அருளால் சிறப்பான வாழ்க்கையைக் கைபிடித்தார்கள். அதை உணர்த்தும் கதை இது..

துரியோதனனுக்கு தர்மனிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொள்ள வேண்டும் என்னும் வஞ்சம் இருந்தது.  சூதாட்டத்தின் மூலமாகத்தான் தர்மரு டைய அத்தனை செல்வத்தையும் அபகரிக்க முடியும் என்றார் சகுணி.  சூதாட்டம் ஆடவா என்று அழைக்க முடியாதே. அதனால்  விழா ஒன்று நடத்த வேண்டும். எதைக் காரணம் காட்டி விழா நடத்துவது என்று யோசித்தான் துரியோதனன்.

அழகிய மண்டபம் ஒன்று கட்ட வேண்டும் என்று நினைத்திருந்தான் துரியோ தனன். அதன்படியே விரைவாக வேலையைத் தொடங்கினான். மண்டபம் காண வாருங்கள், மகிழ்வாக விழாவைக் கொண்டாடலாம் என்று ஓலையில் அழைப்பு எழுதி திருதராஷ்டிரனிடம் கையெழுத்து வாங்கினான் துரியோதனன். பிறகு சகுணியின் அறிவுரைக்கேற்ப விதுரர் மூலமாக தர்மருக்கு அனுப்பி வைத்தான்.

தர்மரிடம்  ஓலை வந்து சேர்ந்தது. அதைப் பிரித்து படித்த தர்மர் தனது சகோதரர் களிடம் சென்று தனித்தனியாக ஆலோசனை செய்தார். முதல் சகோதரனிடம் சென்று “திருதாராஷ்டிரர் கையெழுத்திட்ட ஓலை வந்திருக்கிறது. மண்டப விழாவுக்கு செல்வோமா?” என்று கேட்கிறார்.  மற்றொரு சகோதரனிடம் சென்று “மண்டப விழாவுக்கு அழைப்பிதழ் வந்திருக்கிறது. எல்லோரும் போகலாம்” என்றார். அடுத்த சகோதரனிடம்  “ஓலை வந்திருக்கிறது விதுரர் கொண்டு வந்தி ருக்கிறார். எல்லோரும் போக வேண்டும்” என்கிறார்.

இறுதியாக சகாதேவனிடம்  இதே போன்று சொல்லியதும் “ஓலை கொண்டு வந் தது யார்?” என்று கேட்கிறான். “விதுரர் ஓலை எடுத்துவந்தார் என்கிறார் தர்மர்” ”அனுப்பியது யார்” என்றான் சகாதேவன். ”துரியோதனன் அனுப்பினான்” என்கிறார்.  ”ஓலையில் கையெழுத்து இருக்குமே அது யார் போட்டிருக்கிறார்கள்” என்று கேட்டான். ”அது திருதராஷ்டிரன் போட்டிருக்கிறார்” என்றார் தர்மர். இப்படியே சகாதேவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும்  தர்மர்  சலிக்காமல் பதில் கூறினார். ஒரு கட்டத்தில் சலித்து விட்டார். ”எதற்கு கேட்கிறாய் சகாதேவா” என்கிறார். ”நீங்கள் ஓலை அனுப்பியது ஒருவர், கையெழுத்திட்டது ஒருவர், அனுப்ப நினைத்தது ஒருவர், கொண்டு வந்தது மற்றொருவர் என்றெல்லாம் நினைக்கிறீர்கள். ஆனால் என்னைப்பொறுத்த வரை இவை அனைத்தையும்  செய்வது ஒருவன் தான்” என்றார்.

”யாரது” என்றார். ”வேறு யார் விதிதான்?” என்றபடி சென்றுவிட்டான் சகாதேவன். அந்த விதியின் பாதையில் வந்த பாண்டவர்கள் பட்ட பாட்டைத்தான் மகாபாரத மாய் இயற்றியிருக்கிறார்களே. தர்ம வழியில் வாழ்ந்த அவர்களுக்கே அந்த நிலை என்றால் நாமெல்லாம் என்ன செய்வது.. இறைவனின் பாதத்தைப் பற்றுவதைத் தவிர வேறு வழிதான் ஏது?

Sharing is caring!