63 நாயன்மார்கள் – அமர்நீதி நாயனார்…

சைவ சமயத்தவர்களால் போற்றப்படும் 63 நாயன்மார்களில் அமர்நீதி நாயனாரும் ஒருவர். இவர் 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர். சோழநாட்டில் கும்பகோணம் பழையாறை என்னும் பகுதியில் பிறந்தவர். வைசியர் குலத்தைச் சேர்ந்தவர். சிவபக்தி மிகுந்தவர். பெரும் வணிக குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர் வளர்ந்த பிறகும் வணிகத்தில் ஈட்டிய செல்வத்தைச் சிவத்தொண்டுக்கு செலவிட்டார்.

சிவனடியார்களுக்கு தொண்டு செய்யும் பொருட்டு திருநல்லூரில் சிவமடம் ஒன்றை கட்டி அங்குவரும் சிவனடியார்களுக்கு அன்னம், வஸ்திரம் தானம் செய்துகொண்டிருந்தார். சிவனடியார்கள் விரும்பும் வண்ணம் கோவணம் வழங்குவதை முக்கியமான பணியாக கொண்டிருந்தார். ஓய்வு நேரங்களில் தன்னுடைய குடும்பத்தோடு அந்த மடத்துக்கு சென்று சிவனடியார்களை உபசரித்து வந்தார்.

இவரது சிவபக்தியில் உருகிய  சிவப்பெருமான் இவரது பெருமையை உலகறியச் செய்யும் பொருட்டு அந்தணர் குல பிரம்மச்சாரியாய் வேடம் தரித்து  இரு கோவணத்தை தமது தண்டில் முடிந்து அமர்நீதி நாயனாரின்  மடத்துக்கு வந்தார்.

தன்னுடைய மடத்துக்கு வந்த பிரம்மச்சாரியை இன்முகத்துடன் வரவேற்ற அமர்நீதி நாயனார் அவருக்கு பாதபூஜை செய்து அமுது உண்ண அழைத்தார். ”முதலில் நீராடி வருகிறேன். அதுவரை என்னுடைய ஒரு கோவணத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். எனக்கு மிகவும் முக்கியமான கோவணம் இது. திரும்பி வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்று மாற்றுவதற்கு கையில் இருந்த இன்னொரு கோவணத்தை எடுத்துச்சென்றார்.

சிவனடியாரின் கோவணத்தைப் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று நினைத்த அமர்நீதி நாயனார் பக்தியுடன்  ஒருவரை கோவணத்துக்கு காவல் வைத்துவிட்டு மடத்தில் இருக்கும் வேலைகளைக் கவனிக்க சென்றுவிட்டார். நீராடிய பிறகு சிவனடியார்  திரும்பி வந்து ”மழைத்துளியால்  என்னுடைய கோவணம் நனைந்துவிட்டது. உங்களிடம்  இருக்கும் என்னுடைய கோவணத்தைக் கொடுங்கள்” என்றார்.

அமர்நீதி  நாயனார்  கோவணத்தை  எடுக்க உள்ளே சென்றார். அது எப்படி இருக்கும். நீராட போகும் போதே அந்த கோவணத்தை மறையச் செய்துவிட்டாரே சிவனடியாராக வந்த சிவப்பெருமான். பதறிய அமர்நீதி நாயனார் தம்மிடமிருந்து கோவணத்தை எடுத்துவந்து ”தங்களது கோவணத்தைப் பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருந்தேன். ஆனால் எப்படி மாயமானது என்று தெரியவில்லை. இந்த கோவணத்தை அணிந்து கொள்ளுங்கள். இது உயர்ந்த துணியால் கோவணமாக நெய்தது. எனது பிழையைப் பொருத்தருளுங்கள்” என்றார்.

சிவனடியாருக்கு கோபம் வந்துவிட்டது.” இப்படித்தான் வரும் சிவனடியார்களிடம் உள்ள கோவணத்தை எடுத்து விற்றுவிடுகிறாயா? எனக்கு என்னுடைய கோவணம் தான்  வேண்டும்” என்றார். செய்வதறியாமல் திகைத்த அமர்நீதி நாயனார் ”உங்கள் கோவணத்தை தராசு தட்டில் வையுங்கள். அதற்கு ஈடாக என்னிடமுள்ள கோவணத்தைத் தருகிறேன்” என்றார். சிவனடியாரும் அதற்கு சம்மதித்தார்.

தராசு தட்டின்  ஒருபுறம்  சிவனடியாரின் கோவணம் வைக்கப்பட்டது.  மறு புறம் அமர்நீதி நாயனார் தம்மிடம் இருந்த கோவணத்தையெல்லாம் வைத்தார். சிவனடியாரின் தட்டு உயர்ந்து இருந்தது. பிறகு தம்மிடம் இருந்த அனைத்து ஆடை ஆபரணங்களையும் கொண்டு வந்து வைத்தார். அப்போதும்  சிவனடியாரின் தராசு தட்டு உயர்ந்தது. செய்த பிழை என்னவோ என்று வருந்திய  அமர்நீதி ”எம்மிடம் இருந்த அத்தனை பொருள்களையும் தராசில் வைத்துவிட்டேன்.

இப்போது நான் என் மனைவி மகனோடு தராசு தட்டில் அமர்கிறேன். எங்களை அடிமையாக வைத்துக்கொள்ளுங்கள்” என்றார். சிவனடியாரும் சம்மதிக்கவே குடும்பசகிதமாய் கண்களை மூடி சிவனை துதித்தபடி  தராசில் அமர்ந்தார். துலாக் கோல் சமமானது.  அனைவரும் கண்களை விழித்தபோது சிவனடியார் மாயமாகி இருந்தார்.

வானத்தில் பூ மழை பொழிய  சிவப்பெருமான் பார்வதிதேவியுடன் தரிசனம் தந்தார். துலாக்கோல் புஷ்பக விமானமாக மாறியது. அமர்நீதி நாயனார் குடும்பத்தோடு கயிலையை அடைந்து சிவனின் திருவடியைப் பற்றி வாழ்ந்தார்.

Sharing is caring!