7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்

அறிவியலைக் கடந்த அதிசயமிக்க ஆலயங்களை எழுப்பியவர்கள் நம் முன்னோர்கள். பல்வேறு ஆலயங்களின் கட்டட அமைப்புகள்  உலக ஆராய்ச்சியாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது என்று சொல்லலாம். அந்த வகையில் அதிசயமிக்க ஆலயம் ஒன்றை 1997 ஆம் வருடம் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் கண்டெடுத்தார்கள்.

இந்த ஆலயத்தை 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்து. இந்த கோயில் பூமியின் அடியில் புதைந்திருந்ததும் எந்த விதமான சேதாரமில்லாமல் அழகு குறையாமல்  மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவில் தட்சிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோயில் என்றழைக்கப்படுகிறது. சுருக்கமாக நந்தீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கிறார்கள்.

பழமையான கல்லால் ஆன தூண்களை தாங்கிய நிலையில் முற்றம் அமைந்திருக்க அதன் நடுவே படிக்கட்டுகளை கடந்து சென்றால் கல்யாணி தீர்த்தம் உள்ளது. வழவழப்பான தன்மையுடன் இருக்கும் கருங்கல்லால் நந்தியையும், சிவலிங்கத்தையும்  வடித்திருக்கிறார்கள். நந்தியின் கண்கள் பொன் வண்ணத்தால் பளபளக்கிறது. கோயிலின் நுழைவாயிலிலும், சுற்றுச்சுவர்களிலும் நந்தி பகவானே அமைந்திருக்கிறார்.

சிவாலயங்களில் சிவனுக்கு எதிரில் தான்  பொதுவாக நந்தி பகவானை  உருவாக்கியிருப்பார்கள். ஆனால் இந்த கோவிலில் சிவனின் தலைக்கு மேல் நந்தியை வைத்திருக்கிறார்கள். இதில் சிறப்பம்சமே  நந்திபகவானின்  வாயிலிருந்து  வழியும் நீர் சிவனின் மீது  தத்ரூபமாக விழும்படி வடிவமைக்கப்பட்டிருப்பதுதான். எந்நேரமும் சிவனை குளிர்வித்தப்படி கனக்கச்சிதமாக அமைக்கப்பட்டிருப்பது அதிசயிக்கவைக்கிறது,

நந்தியின் வாயிலிருந்து லிங்கத்தின் மீது படும் நீர் சிவலிங்கத்தின் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் தீர்த்தத்தில் விழுகிறது. இத்தீர்த்தத்தின் மத்தியில் 15 அடி ஆழத்தில்  நீர்ச்சுழலைக் கொண்டிருக்கிறது. இங்கு வரும் நீர்,  நந்திபகவானின் வாயில் வடியாமல் வழியும் நீர், தீர்த்ததில் உண் டாகும் நீர்ச்சுழல், சுழல் வழியாக செல்லும் நீர் என்று விடைதெரியாத தெய்வரகசியங்கள் பக்தர்களை ஆச்சரியப்படுத்துகிறது. பக்தர்கள் இந்தத் தீர்த்தத்தில் வேண்டுதல்கள் நிறைவேற நாணயங்களை வீசி செல்கிறார்கள்.

Sharing is caring!