குழந்தைக்கும் தந்தைக்கும் பாசப்பிணைப்பை அதிகப்படுத்துவது எப்படி?

தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற எண்ணமே குழந்தைகளின் மனதில் தந்தையைப் பற்றிய மதிப்பை உயர்த்தும். அத்துடன், வளரும் குழந்தைகளுக்கு தங்கள் தந்தையின் அருகாமை என்பது உணர்வு ரீதியான பாதுகாப்பை அளிக்கிறது.
குழந்தை வளர்ப்பில் தாய், தந்தை இருவருக்கும் பங்கு உள்ளது. எதிர்கால சமூகத்தில் ஒரு குழந்தை எப்படி வாழ வேண்டும் என்பதை பெற்றோரின் வளர்ப்பே தீர்மானிக்கிறது. உணர்வு ரீதியான வளர்ச்சியை அன்னையின் பாசத்தில் பெறும் குழந்தைகள், அறிவுப்பூர்வமான முதிர்ச்சியை தந்தையின் வழிகாட்டுதல்களில் பெறுகிறார்கள். உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக ஆண் குழந்தைகள் அன்னையிடமும், பெண் குழந்தைகள் தந்தையிடமும் இயல்பான பாசம் கொண்டு வளர்வதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.
இன்றைய தொழில்நுட்ப சூழலில் குழந்தைகளின் அறிவார்ந்த எதிர்கால வளர்ச்சியை கச்சிதமாக அமைத்து தருவதில், தந்தையர்களுக்கு பொறுப்பு அதிகமாக உள்ளது. குழந்தைகள் தந்தையின் அறிவுரைகளை கடைப்பிடிப்பதை விட, அவர்களது நடவடிக்கைகளை பார்த்து அதுபோலவே நடந்து கொள்கிறார்கள். இதன் காரணமாக, தந்தையர்களுக்கு குழந்தைகளை வழி நடத்துவதில் நேரடியான பொறுப்பை விட மறைமுகமான பொறுப்பே அதிகமாக உள்ளது.
தந்தையிடம், குழந்தைகளின் செயல்களை, முயற்சிகளை தாய் தெரிவிக்க வேண்டும். தந்தை அதைப் பாராட்டி ஊக்குவிக்கும்போது, அவர்களது தன்னம்பிக்கை வலுவாகி, தங்களால் சாதனைகளை செய்ய முடியும் என்ற எண்ணம் உருவாகும். குழந்தைகளின் கருத்துக்களை தந்தை பொறுமையாக காது கொடுத்து கேட்க வேண்டும். முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்று அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதன் மூலம் தந்தையை எளிதாக அணுகி, கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு ஏற்படுத்த முடியும்.
எவ்வளவு வேலை இருந்தாலும், குழந்தையின் தந்தையாக குறிப்பிட்ட நேரத்தை அவர்களுடன் செலவிடுவது மிக அவசியம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உரையாட வேண்டும். அவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ அறிவார்ந்த விஷயங்களை அவர்களுடன் பேசலாம். அதன் மூலம் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற எண்ணமே குழந்தைகளின் மனதில் தந்தையைப் பற்றிய மதிப்பை உயர்த்தும். அத்துடன், வளரும் குழந்தைகளுக்கு தங்கள் தந்தையின் அருகாமை என்பது உணர்வு ரீதியான பாதுகாப்பை அளிக்கிறது.
பல்வேறு பணிகள் இருந்தாலும் மாலை நேரங்கள் அல்லது வார இறுதி நாட்களில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதன் மூலம் பாசப்
பிணைப்பு அதிகமாகும். தந்தை தங்கள் மீது பாசமாக இருப்பதை எல்லா குழந்தைகளும் விரும்புகிறார்கள். ஆனால், அதற்காக கண்டிப்பு என்ற மருந்தை தவிர்த்து விட வேண்டாம். தங்கள் தந்தை கண்டிப்பானவர் என்பதை பல குழந்தைகள், சக தோழர்களிடம் பெருமையாக சொல்வதாக தெரிய வந்துள்ளது. ஒரு தந்தையின் கண்டிப்பை உளவியல் அடிப்படையில் பெரும்பாலான குழந்தைகள் ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் அளிக்கிறார்கள் என்பது ஆச்சரியமான செய்தியாகும்.
ஒரு குழந்தை தன் தந்தையுடன் கொண்டுள்ள உறவின் ஆழத்துக்கு ஏற்பவே தனது உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களிடம் பிரியமாக இருக்கிறார்கள் என்று உளவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால், ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும், ஒரு தந்தையாக அவர்கள் மீது பாசத்தை காட்டி வளர்ப்பது முக்கியம்.

Sharing is caring!