பாதாமின் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க தோல் நீக்கி சாப்பிடுங்கள்

பாதாம் மிகவும் சத்து மிக்கது. அதன் தோலை நீக்கிவிட்டு உட்கொள்ளும் போதுதான் முழுமையான பயன் கிடைக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

பாதாமில் வைட்டமின் ஏ, நல்ல கொழுப்பு, துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைவாக உள்ளன. இதன் முழுமையான பலன் கிடைக்க முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, காலையில் பாதாமின் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

பாதாமின் தோல் மிகவும் கடினமானது. அதை நம்முடைய உடல் செரிமானம் செய்யக் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது. தோலை அகற்றிவிட்டு சாப்பிடும்போது செரிமானத் திறன் மேம்படுகிறது. பாதாமை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அதில் உள்ள நீரில் கரையக் கூடிய நார்ச்சத்து தூண்டப்படுகிறது.

இதனால், சிறிது உட்கொண்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு கிடைக்கும். மொத்தத்தில் செரிமான மண்டலத்தின் செயல்திறன் மேம்படும். பாதாமின் தோலில் சில வகையான ரசாயனம் உள்ளது. அது துத்தநாகம், இரும்பு, மக்னீசியம் உள்ளிட்ட தாது உப்புக்கள் கிரகிக்கப்படுவதைத் தடுக்கிறது. தண்ணீரில் ஊறவைத்து, தோலை அகற்றிச் சாப்பிடும்போது இந்த கெட்ட நுண் ஊட்டச்சத்து அகற்றப்படுகிறது. அறை வெப்பநிலையில் 24 மணி நேரம் பாதாம் ஊற வைக்கப்படும் போது அதில் உள்ள phytic acid அளவு 5 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துவிடுகிறது.

பாதாமை தண்ணீரில் ஊறவைத்து தோல் நீக்கி சாப்பிடும்போது மெல்வது எளிதாகிறது. அதன் முழு பயனும் நமக்கு கிடைக்கும். பாதாமை துண்டுகளாக நறுக்கி ஊற வைக்கக் கூடாது. இப்படி செய்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிதைந்துவிடும். ஊறவைத்துச் சாப்பிடுவதற்கு முன்பு சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்வது நல்லது.

Sharing is caring!