சிறுநீரக பிரச்சனை வரக்கூடாதா உங்களுக்கு? அப்போ இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க

இன்றைய உலகில் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சியுடன், ஊட்டச்சத்துள்ள உணவுகளும் அவசியம். ஆரோக்கியமான உணவு உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை தீர்ப்பது மட்டுமல்லாமல், உடலை பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது. மனித உடலில் சிறுநீரகம் என்னும் உறுப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றுகிறது. எனவே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துடன், சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தையும் பராமரிப்பது என்பது எப்போதும் மிகவும் முக்கியமானதாகும்.

மோசமான உணவு பழக்கத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம். அதுவும் சிறுநீரக கல் உருவாக்கம் முதல் சிறுநீரக புற்றுநோய் எது வேண்டுமானாலும் ஏற்படலாம். அதிலும் தற்போது எங்கும் ஜங்க் உணவுகள் விற்கப்படுவதால், இந்த மாதிரியான உணவுகளை அதிகம் உட்கொண்டு பலரும் சிறுநீரக பிரச்சனை முதல் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே தான் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்க்க அறிவுறுத்துகின்றனர். இது நமது உடலுக்கு மட்டுமல்ல, சிறுநீரகங்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும். உங்கள் சிறுநீரகம் எவ்வித இடையூறும் இல்லாமல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், ஆரோக்கியமான சில உணவுப் பொருட்களை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள். கீழே சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பசலைக்கீரை

பச்சை இலைக்காய்கறியான பசலைக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை அதிகம் உள்ளது. மேலும் பசலைக்கீரையில் பீட்டா-கரோட்டீன் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. எனவே உங்கள் சிறுநீரங்கள் ஆரோக்கியமாக இருக்க பசலைக்கீரையை அடிக்கடி சாப்பிடுங்கள்.

அன்னாசி

அன்னாசி ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது சிறுநீரக நோயை தடுக்க உதவுகிறது. மேலும் இதில் மாங்கனீசு, வைட்டமின் சி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் புரோமிலைன் உள்ளது. அதோடு ஏற்கனவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான பழம்.

குடைமிளகாய்

குடைமிளகாயில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இது தவிர, இதில் வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளது. உங்கள் சிறுநீரகங்களை நல்ல நிலையில் வைத்திருக்க விரும்பினால், குடைமிளகாயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பூண்டு

பூண்டில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளதால், சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு பூண்டு மிகவும் நல்லது. உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட விரும்பினால், அன்றாட உணவில் தவறாமல் பூண்டு சேர்த்து வாருங்கள்.

Sharing is caring!