அனர்த்த வாழ்வு

கடல் மடி தேடி நாங்கள்
களித்தது உண்டு; அந்தக்
கடல் எமைத் தேடி வந்து 
கலைத்து ஊர்களையே தின்று
‘கடல்கோள்’ என்றறிந்த சேதி
கடல்…. நிலம் கொன்ற போது
கடற்கரை மணலாய் மக்கள்
கரைந்தனர் ‘சுனாமி’ யோடு !

எத்தனை ஊர்கள் அன்று
இடிந்தன? அலையில் சிக்கி
எத்தனை இலட்சம் மக்கள்
இறந்தனர்? கரையின் செல்வம்
எத்தனை நனைந்து மூழ்கி
இற்றன? கருணைத் தாயாம்
இத் ‘திரை’ இரக்கம் இன்றி
ஏய்த்தது; மானு டத்தை!

இயற்கையின் அனர்த்தப் பக்கம்
எங்களைத் திருத்த, மோன
இயற்கையின் கோரக் கைகள்
எங்களை மிரட்ட, நாங்கள்
இயற்கையின் அழிவால் மீண்டு
எமைக்காக்கும் முறைகள் தேர்ந்தோம்!
இயற்க்கையைப் பகைத்து ஏதும்
இயலாதென றுணர்ந்து கொண்டோம்!

ஆழிப்பேர் அலைகள் தந்த
அனுபவம் கொண்டு, எங்கள்
சூழலைத் தொடர்ந்தும் சீண்டிச்
சொறியாது…அதனைக் காக்கும்
வாழ்க்கையைத் தொடங்கி னோமா?
மண்ணில் நூறனர்த்தம் தம்மை
நாளும் தான் காணு கின்றோம்!
நமை மாற்றின….மண்ணில் வாழ்வோம்!

நன்றி- கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!