அறம்

வண்ணத்துப் பூச்சியொன்று
சிலந்தி வலை சிக்கி
“என்னென் றிதிலிருந்து எழுந்து மீளத் தப்புவது”
என்று சிறகடித்து அடித்து
வலைநூலை
மென்றும் அறுக்க முடியாது
நனவினிலே
மரண பயத்தில்
வலித்துக் களைக்குமட்டும்
சிறகதிர, தப்ப முடியாது துடிக்க ….
பாவ மெனப் பார்த்து
படர்ந்த நூல் வலை அறுத்துப்
போகவிட்டேன் வண்ணத்துப் பூச்சியினை!
என்னையது
வாழ்த்தியதோ இல்லையோ
மகிழ்ந்து மரணப் பிடியைத்
தாண்டி அது தப்பிற்று!
சமகளத்தில் எனை முறைத்துப்
பார்த்தது சிலந்தி!
பட்டினிப் பசி வயிற்றில்
காத்துக் கிடக்கும் தன்
குடும்பத்தை ஏங்கவிட்டு,
இடையில் நுழைந்த இரையைக்
கலைத்துத்,
தடுத்தேன் உணவை எனத்
தாறுமாறாய்த் திட்டிற்று!
என்செய்கை வண்ணத்திக் கிப்போ அறமேதான்!
என்செய்கை சிலந்திக்கு
இக்கணத்தில் பாவமே தான்!
வண்ணத்தி நாயகனாய்,
சிலந்தி எனைத் துரோகியுமாய்,
எண்ணும் உலகில் நான்
என்செய்து முத்தி கொள்வேன்?

நன்றி கவிஞர் த. ஜெயசீலன்

Sharing is caring!