இணையடி நிழல் தருக

வானே வருக! வரந்தந்து எம் வளியில்
கானல் அகற்றி
ஈரப்பதன் கரைக்க!
சூழும் தொடர்வரட்சி தோற்றுக்
குளிர்உலவ
கார்வண்ண முகில்காள்
கருணைகூர்ந்து தூறிடுக!
சூரியத் தேவே…. சுடுசுடு எனநீவிர்
சீறியது போதும்; சினந்தணிந்து
சற்றகன்று
‘உச்சம் கொடுக்கும்’ உமது ஆவல் தவிர்த்து
அச்சாப் பிள்ளையாக
அயலில் சிலிர்ப்பருள்க!
வெப்பம் குழைத்து மேனியிலே சந்தனமாய்
அப்பி எமைஅணைக்கும் அனற்காற்றே…
குளம் குட்டை
எங்கேனும் சென்று இறங்கி
மீண்டு எமைத்தொடுக!
அங்கம் அவிந்து வியர்வை
காட்டாறாச்சு,
பச்சை மரங்களும் பற்றி எரியு(ம்) நிலை,
உச்சி வெயிலில்
உருகியோடும் தார்…நதியாய்,
சிதைநெருப்பாய்க் காலில்
கொள்ளிவைக்கும் தெரு மணலும்,
விதைக்கும் தணலை விண்ணும்
எண் திசை திக்கும்,
நேற்றைக்கும் சூட்டில்…
மூச்சு ஆவியாய் அகல
கூற்றுக் கிரையானார் இருவர்,
கொடுமைகாண்க!
சுண்ணாம் பறையாய் சுடுகிறது சூழல்;
நாம்
அண்ணாந்து ‘நாவுக் கரசர்களாய்ச்’
சிறைப்பட்டோம்!
“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும்…” என்று பதிகமொன்று
பாடி அனலோட்ட
பாசச் சிவனார்கள்
யாரேனும் எழுக!
இணை அடி நிழல் தருக!

நன்றி கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!