சரிதம்

வாழும் வகையறியோம் –எங்கள்
வாழ்வினுக்கு வரம்பேதறியோம்.
வாழ்வில் வளம் பெருக்கும் –வழி
வாசல் எவையென யாம் புரியோம்.
ஆளும் முறைதெரியோம் –அர
சாட்சியின் நுட்பங்கள் யாதுணரோம்.
ஆயினும் வாயின் வீச்சால் –இந்த
அண்ட சராசரம் போய் வருவோம்.

யாவும் அறிந்தவர்போல் –எல்லாம்
யாமே தெளிந்து உணர்ந்தவர் போல்.
யாவும் வளர்ப்பவர் போல் –வையம்
யாசகம் எம்மையே கேட்பதுபோல்
வேசங்கள் போடுகிறோம் –பண்டை
விருதுகள் காட்டி எம் மேன்மை என்போம்.
ஏதும் நம் நாளில் செய்யோம் –பிறர்
எல்லோரையும் நொட்டை சொல்லுகிறோம்.

ஏதும் பொறுப்புணர்வு –எங்கள்
எண்ணத்தில் பூத்து எழும் கனவு
யாதுமோர் அர்ப்பணிப்பு –நாங்கள்
யாரும் வென்றுய்யச் செயும் நனவு
சோதனை தாங்குதற்கு –துணைத்
தோள் தரும் காலத்தின் நற் தொடர்பு
போதை இலா உயர்வு –இவை
போற்றி நடக்கலை நம் மனது!

எங்கள் கடமைகளை –நங்கள்
என்றும் மறந்ததே எம் கொடுமை.
எங்கள் உரிமைகளை –நாங்கள்
இரந்துதான் கேட்பது நம் மடமை.
எங்கள் மரபுகளை –நாங்கள்
ஈட்டுக்கு வைத்ததே எம் புலமை .
எங்கள் செழும் வாழ்வை –மீட்க
என்னதான் செய்தோமடா புதுமை?

யாரைப் பிரதிபண்ணி –நாங்கள்
வாகைகள் சூடலாம் என்று எண்ணி
யாரெவர் காலிடறி –நாங்கள்
யாவாரம் பார்க்கலாம் என்று தேடி
யாது குறுக்கு வழி –நாடி
யமனையும் பேய்க்காட்டி ஆழ ஏங்கி
யாசகர் ஆகிவிட்டோம் –வாழ
யாரைப் பணியலாம் என்று வாடி !

வேரில் படைப்புழுவாம் –எங்கள்
விழுதை அறுக்கும் சில பிளவாம்.
ஊரில் பல குழுவாம் –எங்கள்
உயிலை எழுதும் கரம் எதுவாம் ?
நீரைப் பகிர்ந்தருந்தக் –கூட
நிற்காதோர்…பக்கத்து வேலிகளுள்
தீர்ப்போமா நம் பிணக்கை?–என்று
சீர்செய்வோம் இம்மண்ணின் ஐந்தொகையை?

நன்றி கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!