யாருக்கு இங்கே எதைப்பற்றி கவலையுண்டு?
யாரெவர்க்கு மனிதத்தைப்
பற்றி அக்கறையுண்டு?
தாமுண்டு, தம்பாடு உண்டு, தொழில் உழைப்பு
சோறுண்டு, என்பதன்றி
யார்க்குச் சுரணையுண்டு?
எலும்பு தோல் ஊனுண்டு,
நரம்புண்டு , உயிர் உண்டு,
புலனுண்டு பொறியுண்டு யார்க்கு
உணர்ச்சியுண்டு?
வானம் வறண்டாற் தான் என்ன?
இடர்களிடை
வாழ்க்கை தொலைந்தாற் தான் என்ன?
மிஞ்சியுள்ள
மானம் சிதைந்தால் மனைக்கென்ன?
கொண்டிருந்த
கோலம் குலைந்தாலெம் குடிக்கென்ன?
உயிப்பூட்டும்
காலம் கடந்தாலெக் கதிக்கென்ன?
நிலத்தினிலே
நீரும், வள மண்ணும்,
நிழல்மரமும், நாம்வளர்த்த
கால்நடையும் களவுபோனால்
எங்கள் கடைக்கென்ன?
நாம்போற்றிக் காத்திட்ட பொக்கிஷங்கள்,
மரபுரிமை,
தேய்ந்து சிதைந்தாலித் திசைக்கென்ன?
எம்பேச்சும்,
பாட்டுக்களும், கூத்தும், பழங் கலையும்,
விழுமியமும்,
பாஷையும், மதமும், படிப்பும்,
நம் பண்பாடும்,
பாழானால் என்ன?
பலியானால் தானென்ன?
வாய்மை நலிந்தாலும்,
பொய்மை மிளிர்ந்தாலும்,
நீதி சிதைந்தாலும்,
அநீதி வளர்ந்தாலும்,
ஏழ்மை அழச் செல்வம் சிரித்தாலும்,
ஒருவனினை
தாழ்வு உயர்வுபார்த்து சரித்தாலும்,
யார்க்கென்ன?
வாழ்வும் வரலாறும்
வாழ்க்கை முறைமைகளும்
நாறினால் என்ன?
நீறினால்தான் நமக்கென்ன?
நேசமும் அன்பும் கருணையும்
நிஜஉறவும்
ஈர இரக்க இருதயமும்
மானுடத்தின்
சாரமுமே செத்துச் சாய்ந்தால்
எவர்க்கென்ன?
யாருக்கு இங்கே
இவைபற்றிக் கவலையுண்டு?
யாருக்கு மனிதத்தைப் பற்றி
அக்கறைகளுண்டு?