சூரியக் கவி

பரவிக் கிடந்த பாழிருளை…கீழ்த்திசையில்
உறுஞ்சித் துளித் துளியாய்
ஒவ்வொரு கதிர்நாவால் 
சுவைக்கிறது உதயகாலச் சூரியன்!
இருளென்ன
கடுங் கோப்பியா?
குடித்துக் களையும் புது ஒளிர்வும்
பெற்றெழுந்த சூரியன் பிரகாசனாய்ப்
பகலைக்
கடைவிரித்து விற்கின்றான்!
கருமிருளில் மூடுண்ட
கடையில் இக் காலையினில் …
கண்ணெட்டும் தூரம் மட்டும்
கிடக்கிறது பொருட்கள்…
உயிரோடும் சடமாயும்!
நானுமொரு பொருளென்று நான்காண
வைத்த அந்த
ஞானியாம் சூரியன்
நல்லதொரு கவிஞனென்பேன்!
இயற்கை மறைத்துவைத்த எதையும்
தான்கண்டு
பிடித்தூர்க்குச் சுவைசேர்த்துக்
காட்டுவதால் கவிஞனென்றேன்!
என்மேல் பகல் முலாம் பூசி எனை
ஒளிரவைப்போன்….,
தன்மேல் இருள் பூசி
எதைக்காண முயல்கின்றான்
அந்தி மாலையின் பின்னர்….?
அறியேன்…
வியக்கின்றேன்!

Sharing is caring!