சூரிய மரணம்

(நமது சூரியன் மரணிக்க தொடங்கி விட்டது என்றும் இன்னும் பத்து பில்லியன் ஆண்டுகளில் அது மரணித்து ஒருவகை படிக நிலைக்கு சென்று விடும் என்று விஞ்ஞானிகள் உறுதிசெய்திருக்கிறார்கள் என்ற செய்தியை வாசித்த அருட்டுணர்வில் எழுதியது)

 

சூரியன் இறப்பான் என்று 
சொன்னதோர் சேதி; எங்கள்
சூரியன் இறப்பை நோக்கித்
துளிகளாய் குருதி சிந்தல்
போலத்…தன் திரவ வாயுப்
பொலிவுரு வடிந்து…என்பு
மீதமாய் படிகக் கூடாய்
வீழ்வான் என்றது அச் செய்தி!

ஆய்வுகள் செய்த…வல்ல
அமெரிக்க கனடா வின்…விஞ்
ஞானிகள் கண்டு ரைத்தார்!
நற் செயற்கைக் கோள் கொண்டு
போதிய தகவல் சேர்த்து
புவிக்கிதை உரைத்தார் என்றார்!
ஆம்…பத்து பில்லியனாம்
ஆண்டின்பின் நடக்கும் சொன்னார்!

சூரியன் சாகான் என்று
துணிந்தவர் நாங்கள்; ஆம் நம்
சூரியன் மார்க்கண்டேயன் காண்
சொல்லியோர் நாங்கள்; அன்னான்
சாகாத வரங்கள் பெற்றோன்…
தாராள மாக என்றும்
சூடோடு ஒளி ஈவன்…நாம்
துளிர்க்கலாம் என்றோம்….சோர்ந்தோம்!

சூரியன் ஒருநாள் செத்து
சூடற்று குளிர்ந்து பட்டு
ஓர்வகைப் படிக மாக.
உயிரற்ற சடல மாக.
பாடையில் படுக்க….அன்னான்
பாலிப்பில் சுற்றி வந்த
கோளெலாம் கொள்ளி வைக்கும்
கொடூரமும் நடக்கும் அன்று!

சூரியன் இறந்தால் சூடும்
ஒளியும் தான் தொலைந்து போகும்.
சூரியன் இறந்தால் மண்ணின்
சூழும் தாவரம் என் னாகும்?
சூரியன் இறந்தால் கண்முன்
தோன்றுமா நிலவும் வானும்?
சூரியன் இறந்தால் வாழ்க்கை
சோற்றுக்கு என்ன செய்யும்?

பூமியில் பகலும் சாகும்.
பொய்த்து வான் மழையும் மாளும்.
கால வான் நிலைகள் நாறும்.
கடல், பாலை பனியாய் மாறும்.
பாரில் எவ் உயிர்தான் வாழும்?
‘பல்ப்’புகள் ஒளிரும் நாளும்.
‘சோடிய’ விளக்கில் தானா
சோலைகள் ஒளி தொகுக்கும்?

சூரிய ஈர்ப்புத் தீர்ந்து
கோள்கள்…வேறு ஈர்ப்பு தேட,
பால்வீதி தனிலே வேறு
பகலோனை நாடிப் போக,
காரிருள் கவியும்! நேர
காலமும் தலைகீ ழாகும்.
மானுடன் கூர்ப்பால் மாறி
வாழ்வானா அந்த நாளும்?

நன்றி – கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!