தடையும் தகர்ப்பும்

என்னுடைய கைகளுக்கு விலங்குகளைப்
பூட்டுங்கள்.
என்னுடைய கால்களில்
இரும்புக் குண்டேற்றுங்கள்.
என் இமைகள் திறவாமல்
இறுக்கியே தையுங்கள்.
என்செவிகள் இரண்டையும்
ஈயத்தால் அடையுங்கள்.
என்வாய் திறவாமல் எதும்
காய்ச்சி ஒட்டுங்கள்.
அத்தனையும் செய்து எனை
அடக்கி விட்டோம்….பார்
என்று குதியுங்கள்.
இத்தனை சிறைகளுள்ளும்
இயங்காதென் அங்கங்கள் இறந்ததுபோல்
கிடந்தாலும்….
இயங்கிடும் என் எண்ணங்கள்!
இயங்கிடுமென் சிந்தனைகள்!
எழும் நினைவுப் பேரலைகள்!
மனம் இயற்றும் ….திட்டங்கள்!
எழுச்சி உறுதி எடுக்கும் என் கவிதைகள்!
ஆம் இவையென் நினைவடுக்கில்
அழுகி நாறிச் சிதையாமல்
சேமிக்கப் படுகிறதே …
இவற்றை என்ன செய்வீர்கள்?

ஆக்கம் – கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!