தணிப்பு- ஈழத்துக்கவி

நெருப்பே வெக்கையிலே நீறும்
இக் கோடையிலே….
மர நிழலும் எரிந்து கருகுகிற வேளையிலே…
சூரியனும் புவிவெப்பம் சுட்டு
நடுங்கையிலே…
காய்ச்சலிலே பகல்கள்
காய்ந்து கிடக்கையிலே….
பாயும் எரிமலைக் குழம்பாய்
பகல் வெயில்
மேனி பொசுக்கையிலே….
வெறி கோபம் பசி கிளம்ப
குடைகளும் உடைகளும் கூட ஒட்டி
எரிந்து
கிடக்கையிலே….
அகோரம் குறைந்து அடங்காத
நொடிகளிலே….
எப்படி வெக்கை தணிப்பதென்று
இளநீர் குடித்தும்
தோடை எலுமிச்சை நீர்
குளிரப் பருகியும் கொதியிருந்து
மீள ஏலாப்
பொழுதிலே…. உனது குரல்
பூசியது பனியை என்மேல்!
இளமை குன்றா உன் இசையோ
எரிதணலாய் எழும் பகலை
இளக்கித் தணித்து இத ஈரம் பூசுதென்னுள்!

நன்றி கவிஞர் த. ஜெயசீலன்

Sharing is caring!