தெம்பூட்டு எம்மைத் திருத்து

கல்லாத பேரும் கவிபாட வைக்கும்
கலைஞானம் தந்த தமிழே!
கண்முன் சுரந்து கருணை புரிந்து
கடமை உணர்த்தும் பொருளே!
செல்லாத காசு இலை நாங்கள் என்று
சீர், சொத்து நல்கும் திருவே!
சீவன்கள் போகும் வரை எம்மை வாழ்த்தி
சேவிக்கும் தெய்வ அமுதே!

வானத்தைப் போல வழி, எல்லை அற்று
மண்ணுள்ள யாவும் அறிவாய்!
மாற்றங்கள் சூழும்….வடிவாக மாறி
வரலாற்றில் என்றும் நிறைவாய்!
ஞானத்தின் சாரம் எதுஎன் றறிந்து
நாம் கொள்ள நூல்கள் தருவாய்!
நாள் தோறும் உந்தன் பீடேற்றும் நல்ல
நாவேந்தர் தோன்ற அருள்வாய்!

தேனாக எங்கள் செவி, நாவில் ஊறி
தீயாயும் தீமை சுவைத்து
தேயாமல் வாழும் திருவே…எமக்குத்
தெம்பூட்டு எம்மைத் திருத்து!
மானம், நல் வீரம் மறந்தின்று போச்சு;
மறவாமை நோய்க்கு மருந்து…,
வா…வந்து தந்து வழிகாட்டு …உந்தன்
மைந்தர்க்கு ரோசம் வழங்கு!

நன்றி கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!