தொடர்பு

தூண்டிலிலே முள் கொழுவி,
துளி உணவால் ஆசைகாட்டி,
மீனினை ஏமாற்றிப் பிடித்து விலைபேசி,
யாருக்கோ விற்று இலாபமீட்டி —
ய(ம)வன் குலத்தில்
ஒராளை யேனுந்தான் பழிவாங்க
நினைத்த அதே
மீனினது முள் ஒன்று
‘துண்டில்’ ஒன்றைத் தின்றவனின்
ஆழத்துத் தொண்டையிலே
அப்படியே தூண்டிலாச்சு!
பாவக் கணக்கா சரியாச்சு?
பார்….துரோகம்
யாரோ புரிய…அதை யாரோ அனுபவித்த
சோகத்தை,
துரோகத்தின் தண்டனையை,
அடிக்கடி தான்
காலமும் ‘எவரினிலோ’ காட்டுது…
யார் நம்பியது?
தூண்டில் முள் பற்றி அறியுமா
அதில் மாண்ட
மீனினது முள்?
ஆனால் இரண்டுக்கும் இடைத்தொடர்பை
ஏற்படுத் தியதெதுயார் ?
எவருக்குப் புரிகிறது?

நன்றி கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!