படையல்

யாருக்குப் படைக்கப் படுகிறது இவ்வுணவு?
நீலநிற வாழைத் தலைவாழை
நெடும் இலையில்
வெள்ளருசிச் சோறாய்
வெண்முகில்கள் சுற்றிவர… 
என்னென்னவோ கூட்டு கறிகள்
வறை குழம்பு
தின்னப் படத் தயாராய் வாயூற வைத்திருக்க….
அப்பளமாய் முழுநிலவு
மொறுமொறென்று முன்னிருக்க….
எங்கிருந்தோ தோன்றும்
விண்மீன் இலையான்கள்
மொய்க்காமல் காற்று
மர முறத்தாலே கலைக்க….
யாருக்குப் படைக்கப் படுகுதிந்த இரவுணவு?
யோசித்த படி அயர்ந்து
மொய்த்த நுளம்புகளால்…
பாய்ந்தெழுந்து பார்த்தேன்!
மீந்த இலை மட்டுந்தான்
மேலே கிடந்தது; யார் உண்டு போனாரோ?
நாயாய்ப் புதுக்காற்று
வான் இலையை நக்கிடுதோ?

நன்றி கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!