பா…மாரி நிற்கவே பாடும்

மழை வரம் பத்தா தென்று
மனம் நொந்தோர் பாட்டுச் சொன்னேன்!
வழி மொழிந்தார்கள் பல்லோர்;
வரவேற்றார் எனது பாட்டை!
இளையோர்க்கே என்பா நேற்று
எட்டிற் றென் றிருந்தேன்; நிந்தா
மொழிக்கவி…’வருணன்’ காதை
முட்டிற்றோ…? பொழிந்தே விட்டான்!

ஓரிரா மட்டும் பெய்த
ஓய்விலா மாரி யாலே
வேர் பெயர்ந் தெங்கள் வன்னி
விழுந்தது வெள்ளக் காட்டுள்!
“ஊர்க்கு இம் முறை காணாது
மழை” என்றேன்! ஊர்கள் மூழ்க
மாரியோ ஊழி யாகி
வழித்தது….என்னை எள்ளி!

காண்கின்ற இடங்கள் எல்லாம்
கடலாகி, குளங்கள் மேவிப்
பாய்ந்தது வாழ்வை மூடி,
பகல் இரா சிதம்பப் பொங்கி,
ஊர் அழ அயலில் தங்கி,
உயிர்களை விழுங்கி, பச்சை
நாற்று வேர் நசுக்கி, நாட்டை
நக்கிற்று மாரிப் பாவி!

அளவுக்கு மீறிப் போய்…வான்
அமுதமும் நஞ்சு ஆச்சு!
வெளிக்காது விண், மண் இன்றும்
வெள்ளத்துள் புதைந்து போச்சு!
இழவாச்சு…பத்தா தென்ற
இடிமழை….உயிர் பறித்து!
அழைத்தேன் பாவலரை…”பாடும்
அழிவுகள் வடிய” என்று!

நன்றி – கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!