மழைப் பா

கால நிலைநாறி, களனி குளம் வாடி,
ஊரோ வறண்டு உலர்
பித்த வெடிப்பாகி,
ஓடை துரவு நீறி,
உதிர்ந்து புழுதி கூடி,
நேரம் தவறி நினைத்தபடி,
பருவமழை
மாறி,
வரம் நல்கும் மாரி தடுமாறி,
ஊறும் கிணற்றூற்று ஒரேயடியாய் வற்றி,
நாளும் மழைக்கேங்கி
நம் ஊர் நலியுதின்று!

வேர்திணற வைக்கும் மிகுவெள்ளம்
காடாகி,
வாரடித்து வெள்ள வாய்க்கால் வழியோடி,
கேணி குளம் நிரம்பி,
கிணறெல்லாமும் முட்டி,
மாரித் தவளைகளின் வற்றா
இசைவெள்ளம்
ஊரை நடுங்கவைக்கும்
ஒருகாலம் போனதெங்கு?
ஐப்பசி தொடக்கம் அடுத்த சில மாதம்
தப்பாது மாரி வரும்
சரித்திரமும் மாறிற்று!
மாரி அதன் காலத்தில் மறைகிறது;
இல்லாட்டில்
ஓரிரண்டு நாட்களிலே கொட்டி….
ஊரைக் கொல்கிறது!
‘கும்பச் சரிவு’, ‘சஷ்டி’, ‘பிள்ளையார் கதை’
கடந்தும்
எம்கணக்கு “காணாது இம்முறையும்”
என்கிறது!
அப்பப்போ தாழமுக்கம் அருள
முகில் திரளும்
மப்பில்… இம் மண் நனைந்தும் நனையாதும்,
குளம் கேணி
முற்றாய் நிரம்பாதும்,
முளை அரும்பும் பயிர் பச்சை
முற்றாதும், நிலைமை மோசமாச்சு!
எங்களது
வாழ்க்கை நிலைபோல…
வானில் ஒழுங்காய் நிகழ்ந்த
கால நிலையும் இன்று கலைந்து போச்சு!
காய்ந்துலர்ந்து
வான் பார்த்து எங்கள்மண்
வாடி வெடிக்கிறது!
“வா வா மழை வா” என அழைக்கும்
சிறுவரில்லாக்
காலத்தில்…பொய்த்தும்,
கணக்கு விட்டும், குழம்பும்
மாரிக்குப் பதிலாய் எம்
மண்ணைக் குளிரவைத்து
ஈரம் பெருக்க இனி என்செய்ய ஏலுமென்று
கேட்டீர்கள்….நான்சொல்வேன் கீதையொன்று!
“பாவலர்காள்
பாடுங்கள்! நம்மண்ணை
பாமழையால் நிதம் நனைத்து
ஈரமாக்கி,
அதனை இழக்கியே பண்படுத்தி,
மாரியின் குறைநிரப்பி,
வரலாற்றினை மாற்றி,
வாழ்வைப் பதப்படுத்தி வாழவைப்போம்…
ஊரை! நம்
பாமழையால் தணிப்போம்…நம்
மனம், மண்ணின் கொடும் சூட்டை!”
என்னுடைய கீதையினை எத்தனைபேர்
கேட்பீர்கள்?
ஒன்றாகப் பாமழையை
ஊர் குளிரப் பொழியுங்கள்!

21.12.2018

நன்றி – ஆக்கம் கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!