ஃபுல்ஹேமை வீழ்த்தியது டாட்டன்ஹேம்!

4 ஆண்டுகளுக்கு பிறகு பிரீமியர் லீக் தொடருக்கு தகுதி பெற்றுள்ள ஃபுல்ஹேமை, டாட்டன்ஹேம் ஹாட்ஸ்பர்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாட்டன்ஹேம் அணியுடன் ஃபுல்ஹேம் மோதியது. 2014ம்  ஆண்டு இரண்டாம் தர லீகிற்கு தள்ளப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு பிறகு, பிரீமியர் லீக் திரும்பியுள்ளது ஃபுல்ஹேம். கடந்த சீசனில் லீக் பட்டியலில் 3 வது இடத்தை டாட்டன்ஹேம் பிடித்திருந்தது. லண்டன் வெம்ப்லி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

ஆரம்பம் முதல் டாட்டன்ஹேம் முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. பல எளிய வாய்ப்புகள் கிடைத்தும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில், 43வது நிமிடம், டாட்டன்ஹேமின் லூகாஸ் மோரா சுமார் 20 அடி தூரத்தில் இருந்து அட்டகாசமான ஷாட் அடித்து முதல் கோல் கொடுத்தார். முதல் பாதி 1-0 என் முடிந்தாலும், இரண்டாவது பாதி துவங்கி சில நிமிடங்களில், ஃபுல்ஹேம் அணியின் மிட்ரோவிச் கோல் அடித்து சமன் செய்தார்.

விடாமல் தொடர்ந்து அட்டாக் செய்து விளையாடியது டாட்டன்ஹேம். 72வது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த ஒரு ப்ரீகிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார், கெய்ரன் ட்ரிப்பியர். தொடர்ந்து, 77வது நிமிடத்தில், நட்சத்திர வீரர் ஹேரி கேன் கோல் கீப்பரை தண்டி பந்தை சுழற்றி அடித்து 3-1 என வெற்றி பெற வைத்தார்.

Sharing is caring!