அடுத்தடுத்து அதிர்ச்சித் தோல்வி

லா லிகா கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் ஒரே நாளில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளன. முன்னணி கால்பந்து கிளப் அணிகள் மோதும் லா லிகா கோப்பை தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 6வது லீக் சுற்றுப் போட்டியில் நட்சத்திர அணியான பார்சிலோனா, புள்ளிப் பட்டியலில்  கடைசி இடத்தில் இருந்த லா லிகானஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

இப்போட்டியில் பார்சிலோனா 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. லிகானஸ் அணி 52, 53வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து பார்சிலோனா அணியை ஸ்தம்பிக்க வைத்தது. பார்சிலோனா தரப்பில் கோடின்ஹோ 12வது நிமிடத்தில் கோல் அடித்திருந்தார். இத்தொடரில் அதிக போட்டியில் (423) விளையாடிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பார்சிலோனாவின் முக்கிய வீரர் மெஸ்ஸி படைத்த நிலையில், அடுத்த போட்டியிலேயே அவரது அணி தோல்வி அடைந்தது ரசிகர்களை  ஏமாற்றி உள்ளது.

இதே போல, மற்றொரு நட்சத்திர அணியான ரியல் மாட்ரிட் 0-3 என்ற கோல் கணக்கில் செவில்லா அணியிடம் வீழ்ந்தது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை வகிக்கும் பார்சிலோனா, ரியல்மாட்ரிட் இரு அணிகளும் ஒரே  நாளில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது தொடரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sharing is caring!