அதிகூடிய விக்கெட்களை வீழ்த்திய லசித் மலிங்கவின் பந்துவீச்சு மிகப்பெரிய சவால்

இலங்கை அணியின் லசித் மலிங்கவின் வேகப்பந்து வீச்சே இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கான பிரதான சவால் என சகலதுறை வீரரான மொயின் அலி கூறியுள்ளார்.

லசித் மலிங்க 500 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள பந்துவீச்சாளர். அவரது பந்துவீச்சு மட்டுமே எமக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். எனினும், அந்த சவாலை முறியடிக்க முடியும். நாம் போட்டிக்கு தயாராகியுள்ளோம் என மொயின் அலி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகலையில் நடைபெறவுள்ளது.

பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப்போட்டி இன்று (17) பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் பல்லேகலை மைதானத்தில் 22 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளதோடு, அதில் இலங்கை அணி 20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது.

அவற்றில் 10 போட்டிகளில் வெற்றியும் 10 போட்டிகளில் தோல்வியையும் இலங்கை அணி சந்தித்துள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் கண்டி பல்லேகலை மைதானத்தில் இதுவரையில் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன.

அவற்றில் ஒரு போட்டியை இலங்கை அணி வெற்றிகொண்டுள்ளதோடு, மற்றைய போட்டியை இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

இந்தநிலையில், பல்லேகலை மைதானத்தில் அதிகூடிய விக்கெட்களை வீழ்த்தியவராக லசித் மலிங்க பதிவாகியுள்ளார்.

அவர் 14 இன்னிங்ஸ்களில் 601 ஓட்டங்களுக்கு 24 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

கண்டி பல்லேகலை மைதானத்தில் 35,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்க முடியும்.

5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 – 0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

இந்தத் தொடரின் சகல போட்டிகளும் சிரச மற்றும் டிவி வன் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!