அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரர்

மல்யுத்த போட்டிகளில் 100 கிலோவிற்கும் அதிக உடல் எடை கொண்ட வீரர்களைப் பார்த்திருப்போம். ஆனால், 140 கிலோ எடை கொண்ட ஒருவர் கிரிக்கெட் விளையாடவுள்ளார்.

2007 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பெர்மூடாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பா ஆட்டமிழந்ததை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

பருத்த உடல் கொண்ட பெர்மூடா அணியின் டுவைன் லிவரோக்கின் அபாரமான பிடியெடுப்பில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பருமனான உடல் கொண்ட லிவரோக்கின் அற்புதமான பிடியெடுப்பு அப்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது. பெர்மூடா வீரர் டுவைன் லிவரோக்கின் உடல் எடை 127 கிலோகிராம் என அப்போது கணக்கிடப்பட்டிருந்தது.

ஆனால், அவரை விடவும் எடை கூடிய ஒருவர் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக களமிறங்கவுள்ளார். அவரது பெயர் ரஹ்கீம் கோர்ன்வால் (Rahkeem Cornwall)

6 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட கோர்ன்வால் 140 கிலோ கிராம் எடை கொண்ட கிரிக்கெட் வீரராகத் திகழ்கிறார்.

இந்தியாவிற்கு எதிராக எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாத்தில் கோர்ன்வால் பெயரிடப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் நடத்தப்படும் லீக் மற்றும் பிராந்திய போட்டிகளில் தனது அபார துடுப்பாட்டத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ள கோர்ன்வால், சுழற்பந்து வீச்சின் மூலமும் எதிரணி வீரர்களின் விக்கெட்களை லாவகமாகக் கைப்பற்றுகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியா , மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது , அந்த அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் கோர்ன்வால் விளையாடியிருந்தார்.

இந்தப் போட்டியில் கோர்ன்வால் தொடர்பில் அதிகம் பேசப்படாவிட்டாலும் விராட் கோஹ்லி, செட்டிஸ்வர் புஜாரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

இதுவரை 55 முதற்தர போட்டிகளில் விளையாடியுள்ள கோர்ன்வால், அதில் ஒரு சதம், 13 அரைச்சதங்களுடன் 2224 ஓட்டங்களைக் குவித்து 260 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

முதற்தர போட்டிகளில் 17 தடவைகள் 5 விக்கெட் பெறுதியையும் 13 தடவைகள் நான்கு விக்கெட் பெறுதியையும் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோர்ன்வால் விளையாடும் பட்சத்தில் சர்வதேச அரங்கில் விளையாடும் அதிக எடை கொண்ட வீரர் என்ற சிறப்பைப் பெறுவார்.

Sharing is caring!